சப்-இன்ஸ்பெக்டர் மகள் தூக்குப்போட்டு தற்கொலை... திருமணமான 11 மாதத்தில் பரிதாபம்

16 hours ago 3

வேலூர்,

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அருகே உள்ள ஒதியத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணமூர்த்தி (வயது 54), விவசாயி. இவரது மனைவி ஜெயந்தி. பள்ளிகொண்டா போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு பேபி ஷாமினி (23) என்ற மகளும், விஷ்ணு மகாராஜன் என்ற மகனும் உண்டு. பேபி ஷாமினி பிசியோதெரபி படித்துள்ளார்.

ஜெயந்தியுடன் பணியாற்றி வந்த பள்ளிகொண்டா கேமரான்பேட்டையைச் சேர்ந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பிரியாகுமாரியின் மகள் ரோகித் என்பவருக்கும், பேபிஷாமினிக்கும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 50 பவுன் நகை, ரூ.16 லட்சம் மதிப்புள்ள ஒரு காரும் வழங்கியுள்ளனர்.

இந்த நிலையில் ரோகித்துக்கு குடிப்பழக்கம் இருப்பது திருமணமான 15-வது நாளில் பேபிஷாமினிக்கு தெரியவந்தது. பேபி ஷாமினி தாயார் ஜெயந்தியிடம் கணவர் தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பதாகவும், வேறு பெண்ணுடன் தகாத உறவு வைத்திருப்பதாகவும் கூறியுள்ளார். அப்போது அவர் மகளுக்கு அறிவுரை கூறி சமாதானம் செய்தார். மேலும் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, பேபிஷாமினி தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார்.

பின்னர் பிரியாகுமாரி தனது கணவர் ஜெயவேந்தனுடன் ஜெயந்தி வீட்டுக்கு சென்று என் மகன் செய்தது தவறு என்று கூறி மருமகளை தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றார். ஒரு மாதம் கழித்து மீண்டும் ரோகித் மதுபோதையில் கார் மற்றும் 50 பவுன் நகையை கொண்டு வரும்படி பேபிஷாமினியை அடித்து துன்புறுத்தி துணிமணிகளை எடுத்து வீட்டின் வெளியே வீசி உள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த பேபிஷாமினி தம்பி விஷ்னுமகாராஜனுக்கு போன் செய்து தன்னை வீட்டுக்கு அழைத்துச் செல்லும்படி கூறியுள்ளார். உடனே விஷ்ணு மகாராஜன் காரில் சென்று அவரை ஒதியத்தூருக்கு அழைத்து வந்தார். இதையடுத்து வீடியோ காலில் தன் கணவருடன் பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர் உடனடியாக மனைவியை பார்ப்பதற்காக ஒதியத்தூருக்கு வந்தார்.

மனைவி தங்கி இருந்த அறைக்கதவு பூட்டி இருந்ததால் பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை அழைத்தனர். பேபி ஷாமினியின் பதில் வராததால் சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது அவர் தூக்கில் தொங்கி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவரை மீட்டு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்துவிட்டு அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிகொண்டா போலீசார் விரைந்து சென்று பேபி ஷாமினியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பேபிஷாமினியின் பெற்றோர் கொடுத்த புகாரில், என் மகளை பிரியகுமாரி, ஜெயவேந்தன், ரோகித் ஆகியோர் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தி, துன்புறுத்தி தற்கொலை செய்து கொள்ள தூண்டி உள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். மேலும் திருமணமாகி 11 மாதங்களே ஆனதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Read Entire Article