கேளிக்கை வரி மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல்

4 hours ago 4

சென்னை,

கல்வி நிறுவனங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கு 10 சதவீதம் கேளிக்கை வரி விதிக்கும் தமிழ்நாடு அரசின் சட்ட மசோதாவுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு நிறைவேற்றிய மசோதாவுக்கு கவர்னர் ஒப்புதல் அளித்த நிலையில் அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.

கேளிக்கை வரி மசோதா:-

தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகள் கேளிக்கை வரிச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள கேளிக்கைகள் மற்றும் பொழுதுபோக்குகள் மீது வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் வழங்கப்படுகிறது. கல்வி நிறுவனம் உள்ளிட்ட எந்தவொரு நிறுவனத்தால் அனுமதி கட்டணம் வசூலித்து நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சி எதற்கும் கேளிக்கை வரி விதிப்பதற்கும் வசூலிப்பதற்கும் அதிகாரம் அளிக்க சட்டங்கள் எதுவும் தற்போது இல்லை.

எனவே அதுபோன்ற நிகழ்ச்சிகளுக்கான அனுமதிக் கட்டணத்தின் மீது 10 சதவீதம் கேளிக்கைகள் வரி விதிக்கவும், வசூலிக்கவும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழிவகை செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்காக தமிழ்நாடு உள்ளாட்சி அமைப்புகளின் கேளிக்கை வரிச்சட்டத்தில் திருத்தம் செய்து, புதிய பிரிவு சேர்க்கப்படுகிறது.

கல்வி நிறுவனம், சங்கம், குழுமம், யாருடைய பெயரிலாவது அமைக்கப்பட்டுள்ள கழகம் போன்ற நிறுவனங்களின் வளாகங்கள் மற்றும் நுழைவுச்சீட்டு அல்லது பங்களிப்பு அல்லது சந்தா போன்ற கட்டணங்கள் செலுத்த வேண்டிய இடங்கள் ஆகியவற்றில் நடத்தப்படும் இசை நிகழ்ச்சி, நாடகம், காட்சி அல்லது பிற நிகழ்ச்சியின் அனுமதிக் கட்டணத்தில் மாநகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் 10 சதவீதம் கேளிக்கை வரி வசூலிக்கும் வகையில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.

Read Entire Article