சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர அதிமுக திட்டமா?

12 hours ago 1

சென்னை,

சட்டசபையில் வரும் 14-ந் தேதி தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த பட்ஜெட் கூட்டத் தொடர்தான் முழுமையாக நடைபெறும். அடுத்த ஆண்டில் இடைக்கால பட்ஜெட்தான் தாக்கல் செய்யப்படும். எனவே இந்த பட்ஜெட் கூட்டத் தொடரை வரும் மே 7-ந் தேதிக்கும் மேலாக நடத்த அரசு திட்டமிட்டு உள்ளது. இந்த ஆட்சியின் வெற்றிகரமான 4-ம் ஆண்டு நிறைவை சட்டசபையில் பதிவு செய்யும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

இந்த காலகட்டத்தில்தான் எதிர்க்கட்சிகளும் தங்களின் முழு பலத்தை காட்ட திட்டமிடும். மக்கள் பிரச்சினைகளை முன்வைத்து, ஆளும் கட்சிக்கு நெருக்கடிகளை ஏற்படுத்தும் விதத்தில் பல்வேறு போராட்ட கோணங்களை நோக்கி எதிர்க்கட்சிகள் செல்ல திட்டமிடும்.

தி.மு.க. எதிர்க்கட்சியாக இருந்தபோது, ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க.விற்கு சட்டசபையில் கடும் சவால்களை ஏற்படுத்தி இருந்தது. அதில் ஒன்று, கடந்த ஆட்சியில் அப்போதைய சபாநாயகர் தனபால் மீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானமாகும். தனபாலை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக் கோரும் தீர்மானத்தை 10 எம்.எல்.ஏ.க்களின் கையெழுத்துடன் அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்திருந்தார்.

இப்படிப்பட்ட தீர்மானத்தை அவையில் கொண்டு வரும்போது, இருக்கையில் சபாநாயகர் அமராமல் வெளியே சென்றுவிட வேண்டும். எனவே அப்போது அவையை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் நடத்தினார். அவையில் அ.தி.மு.க.விற்கு சாதகமாக தனபால் செயல்படுவதாக அப்போதைய எதிர்க்கட்சித் தலைவர் குற்றம்சாட்டினார். சபாநாயகர் தனபால் நடுநிலையாக செயல்படவில்லை என்று சட்டசபை காங்கிரஸ் கட்சியும் குற்றம்சாட்டியது.

மேலும், எண்ணி கணக்கெடுக்கும் முறையான 'டிவிஷன்' முறையில் வாக்கெடுப்பு நடத்தும்படி எதிர்க்கட்சி தி.மு.க. கோரியதால், அவையின் கதவுகள் அடைக்கப்பட்டு, 6 பிரிவுகளாக அமர்ந்திருந்த எம்.எல்.ஏ.க்களிடம் ஒவ்வொரு பிரிவாக வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் தி.மு.க.வின் தீர்மானம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு தனபால் சபாநாயகர் இருக்கையில் அமர்ந்து அவையை தொடர்ந்து நடத்தினார்.

அதே கத்தியை தற்போது அ.தி.மு.க. கையில் எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத் தொடரில் சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வர இருப்பதாக அக்கட்சியின் மூத்த நிர்வாகி ஒருவர் தெரிவித்தார். அதுபற்றி 14-ந் தேதி கூடவுள்ள அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. அந்த தீர்மானம் என்றைக்கு அவையில் எடுத்துக் கொள்ளப்படும் என்பதை சபாநாயகர் அப்பாவு அறிவிப்பார்.

சபாநாயகர் அப்பாவு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்படும் பட்சத்தில், எடப்பாடி பழனிசாமி அதில் உரையாற்றி பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைப்பார். அதற்கு ஆதரவு தெரிவித்து மற்ற சில எதிர்க்கட்சியினரும் பேச வாய்ப்பு உள்ளது. அதற்கு முதல்-அமைச்சரோ அல்லது அவை முன்னவரோ பதில் அளித்த பிறகு, நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெறும். வாக்கெடுப்பை சட்டசபை செயலாளர் நடத்துவார். முடிவை துணை சபாநாயகர் அறிவிப்பார்.

Read Entire Article