
ஸ்ரீநகர்,
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன். இவர் செவ்லான் குளிர்பான நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் ரூ. 1,500 கோடியில் அலுமினியம் பாட்டில் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்க 25.75 ஏக்கர் நிலம் இலவசமாக ஒதுக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியானது. இதற்கான ஒப்பந்தம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் போடப்பட்டு உள்ளது. தற்போது, இந்த விவகாரம் வெளியாகி சட்டசபையில் விவாதத்தை கிளப்பி உள்ளது.
ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் கேள்வியாக எழுப்பி உள்ளன. இந்த கேள்விக்கு முதல்வர் ஓமர் அப்துல்லா பதிலளிக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுபற்றி விவசாயத்துறை மந்திரி ஜாவித் அகமது தார் கூறுகையில், ‛‛இந்த விவகாரம் என்பது வருவாய் துறை சம்பந்தப்பட்டது. இதுபற்றி எங்களிடம் எந்த தகவலும் இல்லை. இந்த விவகாரத்தின் உண்மை தன்மை பற்றி விசாரிக்கிறோம்'' என்றார். தற்போது இந்த விவகாரம் காஷ்மீர் முதல் மந்திரி உமர் அப்துல்லாவுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக முத்தையா முரளிதரன் நம்நாட்டில் தனது தொழிலை விரிவுப்படுத்தும் வகையில் கடந்த கடந்த ஆண்டு கர்நாடகாவில் ரூ.1,400 கோடி முதலீடு செய்வதாக அறிவித்தார். இதையடுத்து கர்நாடக அரசு சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 46 ஏக்கர் பரப்பளவில் தொழிற்சாலை அமைப்பதற்கான நிலத்தை ஒதுக்கீடு செய்தது குறிப்பிடத்தக்கது.