
புதுடெல்லி,
1979-ம் ஆண்டு கல்லுக்குள் ஈரம் தமிழ்த் திரைப்படத்தின் மூலம் தமது 13-வது வயதில் திரை உலகில் கால் பதித்தவர் நடிகை விஜயசாந்தி. லேடி சூப்பர்ஸ்டாராக தென்னிந்திய திரை உலகில் ஒரு கலுக்கு களக்கினார். அந்த அளவிற்கு அவரது படங்கள் அதிரடியாக இருக்கும்.
1998-ம் ஆண்டே பாஜகவில் இணைந்தார். பாஜகவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவரான எல்.கே.அத்வானியின் பேரன்புக்குரியவராக வலம் வந்த நடிகை விஜயசாந்தி, பாஜகவின் மகளிரணி செயலாளராகவும் பதவி வகித்தார். 1999-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் நாடு தழுவிய அளவில் விஜயசாந்தி பெரும் கவனம் பெற்றார். அந்த தேர்தலில் தெலுங்கானாவில் சோனியா காந்தி போட்டியிடும் நிலையில் அவருக்கு எதிரான பாஜக வேட்பாளராக விஜயசாந்தி அறிவிக்கப்பட்டார். ஆனால் சோனியா காந்தியோ பெல்லாரி தொகுதியில் போட்டியிட்டார். இதனால் விஜயசாந்தி தேர்தலில் களம் காணாமல் இருந்தார்.
2005-ம் ஆண்டு தனி தெலுங்கானா கோரிக்கைக்காக தாய் தெலுங்கானா என்ற தனி கட்சியை தொடங்கினார் நடிகை விஜயசாந்தி. ஆனால் இந்த கட்சி மக்களிடம் செல்வாக்கு பெறவில்லை. இதனால் தெலுங்கானா தனி மாநில கோரிக்கையை முன்வைத்து களம் கண்ட டிஆர்எஸ் கட்சியில் இணைந்தார். 2009-ம் ஆண்டு மக்களவை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்குள் நுழைந்தார் விஜயசாந்தி.
ஆனால் டிஆர்எஸ் கட்சியிலும் நீண்டகாலம் நீடிக்காத விஜயசாந்தி 2014-ல் காங்கிரசில் இணைந்தார். அப்போதைய சட்டசபை தேர்தலில் தோல்வியடைந்த விஜயசாந்தி நீண்ட்காலம் அரசியலில் இருந்து ஒதுங்கி இருந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் ராகுல் காந்தி மூலம் விஜயசாந்திக்கு காங்கிரசில் பொறுப்புகள் கொடுக்கப்பட்டன. ஆனாலும் 2020-ல் பாஜகவுக்கு மீண்டும் தாவினார் நடிகை விஜயசாந்தி. பாஜகவின் செயற்குழு உறுப்பினர் பதவியும் கொடுக்கப்பட்டது. தெலுங்கானா பாஜக தலைவர் பதவியை எதிர்த்த விஜயசாந்திக்கு ஏமாற்றமே கிடைத்தது. இதனால் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கே திரும்பிவிட்டார்
2023-ம் ஆண்டு காங்கிரஸில் இணைந்த விஜயசாந்திக்கு தற்போது தெலுங்கானா மாநில சட்ட மேலவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட காங்கிரஸ் மேலிடம் வாய்ப்பு கொடுத்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை மட்டுமே உள்ளது. தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டசபை மற்றும் சட்ட மேலவை (எம்.எல்.சி MLC) உண்டு. தெலுங்கானா சட்ட மேலவை தேர்தலில் போட்டியிடும் 3 வேட்பாளர்களில் ஒருவராக நடிகை விஜயசாந்தியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே அறிவித்துள்ளார். அட்டாங்கி தயாகர், கேதவத் சங்கர் நாயக், நடிகை விஜயசாந்தி ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். சிபிஐ கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்வதெனவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.