
சென்னை,
தயாரிப்பு நிறுவனமான எம்ஜி ஸ்டூடியோஸ் அவர்கள் தயாரிக்கும் முதல் திரைப்படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் டைட்டில் போஸ்டரை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டுள்ளனர்.இப்படத்தின் மூலம் அஜய் கார்த்தி கதாநாயகனாக அறிமுகமாகிறார். இப்படத்தை கல்யாண் கே ஜெகன் இயக்கியுள்ளார். இப்படத்தின் கதையை டாடா பட இயக்குனர் கணேஷ் கே பாபு எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அஞ்சனா முருகன்.
இது ஒரு ஹாரர் கதைக்களத்துடன் உருவாகியுள்ளது. இந்நிலையில் படத்தின் முதல் பாடலான ஒரு ஸ்டெப் வச்சா பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை தமன் இசையில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அத்விதீயா வொஜலா இணைந்து பாடியுள்ளனர். பாடல் மிகவும் துள்ளலாக அமைந்துள்ளது. பாடலின் வரிகளை விவேக் எழுதியுள்ளார். விரைவில் திரைப்படம் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.