சபரிமலையில் குவியும் பக்தர்கள் - 9 நாட்களில் 6 லட்சம் பேர் தரிசனம்

3 hours ago 2

திருவனந்தபுரம்,

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 15-ந் தேதி மாலையில் திறக்கப்பட்டது. மறுநாள் முதல் பக்தர்கள் மாலை அணிந்து, விரதம் மேற்கொண்டு இருமுடி கட்டி சபரிமலைக்கு வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு வழக்கத்தை விட பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலமும், உடனடி தரிசன முன்பதிவு மூலமும் அய்யப்பனை தரிசிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 9 நாட்களில், 6 லட்சத்து 12 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ததாக திருவிதாங்கூர் தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய தேவஸ்தான தலைவர் பிரசாந்த், "சபரிமலையில் மண்டல சீசனை முன்னிட்டு நடை திறக்கப்பட்ட 9 நாட்களில் சாமி தரிசனத்திற்கு 6 லட்சத்து 12 ஆயிரத்து 294 பேர் வந்துள்ளனர். இது கடந்த ஆண்டை விட 2 மடங்கு அதிகமாகும். 23-ந் தேதி வரை காணிக்கை, அப்பம், அரவணை விற்பனை உள்பட மொத்த வருமானமாக ரூ.41 கோடியே 64 லட்சத்து 65 கிடைத்துள்ளது. இது கடந்த ஆண்டை விட ரூ.13 கோடியே 13 லட்சம் கூடுதல் வருமானம் கிடைத்துள்ளது.

பம்பை, எருமேலி, வண்டிப்பெரியார் ஆகிய ஸ்பாட் புக்கிங் மையங்களில் பக்தர்கள் ஆதார் அடையாள அட்டையை மட்டும் கொண்டு முன்பதிவு செய்து தரிசிக்க வசதி செய்யப்பட்டுள்ளது" என்று அவர் கூறினார்.

Read Entire Article