சேலம்: சபரிமலை சீசனையொட்டி கச்சக்குடா, ஐதராபாத்தில் இருந்து நவம்பர் மாதத்தில் 2 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டது. இந்த ரயில்களின் இயக்க காலத்தை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டித்து ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, கச்சக்குடா-கோட்டயம் சிறப்பு ரயில் (07133), வரும் 5, 12, 19, 26ம் தேதிகளில் (வியாழன் தோறும்) நீட்டித்து இயக்கப்படுகிறது. கச்சக்குடாவில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்படும் இந்த ரயில காட்பாடி, ஜோலார்பேட்டை வழியே சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, திருச்சூர், எர்ணாகுளம் வழியே கோட்டயத்திற்கு மாலை 6.50 மணிக்கு சென்றடைகிறது.
மறுமார்க்கத்தில் கோட்டயம்-கச்சக்குடா சிறப்பு ரயில் (07134), வரும் 6, 13, 20, 27ம் தேதிகளில் (வெள்ளிக்கிழமை தோறும்) நீட்டித்து இயக்கப்படுகிறது. கோட்டயத்தில் இரவு 8.30 மணிக்கு புறப்படும் இந்த ரயில், பாலக்காடு, கோவை, திருப்பூர், ஈரோடு வழியே சேலத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 5.27 மணிக்கு வந்து, காட்பாடி, ரேணிகுண்டா வழியே கச்சக்குடாவிற்கு இரவு 11.40 மணிக்கு சென்றடைகிறது. இதேபோல், ஐதராபாத்-கோட்டயம் சிறப்பு ரயில் (07135) வரும் 3, 10, 17, 24, 31ம் தேதிகளில் (செவ்வாய்க்கிழமை தோறும்) நீட்டித்து இயக்கப்படுகிறது.
ஐதராபாத்தில் மதியம் 12 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு அடுத்தநாள் காலை 7.22க்கு வந்து, ஈரோடு, திருப்பூர், கோவை, பாலக்காடு, எர்ணாகுளம் வழியே கோட்டயத்திற்கு மாலை 4.10 மணிக்கு சென்றடைகிறது. மறுமார்க்கத்தில் கோட்டயம்-ஐதராபாத் சிறப்பு ரயில் (07136), வரும் 4, 11, 18, 25, ஜனவரி 1ம் தேதிகளில் (புதன்கிழமை தோறும்) நீட்டித்து இயக்கப்படுகிறது. கோட்டயத்தில் மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு அடுத்தநாள் அதிகாலை 3.12 மணிக்கு வந்து, ஜோலார்பேட்டை, காட்பாடி, ரேணிகுண்டா வழியே ஐதராபாத்திற்கு இரவு 11.45 மணிக்கு சென்றடைகிறது.
The post சபரிமலை சிறப்பு ரயில்கள் மேலும் ஒரு மாதம் நீட்டிப்பு appeared first on Dinakaran.