திருவனந்தபுரம்: சபரிமலை கோயில் மேல்சாந்தியாக கொல்லத்தைச் சேர்ந்த எஸ். அருண்குமார் நம்பூதிரியும், மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்தியாக கோழிக்கோட்டைச் சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரியும் இன்று தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நேற்று மாலை திறக்கப்பட்டது. அதையொட்டி நேற்று ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். இன்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள் தொடங்கின. சபரிமலை, மாளிகைப்புரம் கோயில்களுக்கான மேல்சாந்தி தேர்வு வழக்கமாக ஐப்பசி மாதம் தான் நடைபெறும்.
அதன்படி இன்று காலை 7.30 மணியளவில் உஷபூஜைக்குப் பிறகு மேல்சாந்திகளை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை தொடங்கின. குலுக்கல் முறையில் நடந்த இந்த தேர்வில் சபரிமலை கோயில் மேல்சாந்தியாக கொல்லம் சக்திக்குளங்கரை பகுதியை சேர்ந்த எஸ். அருண்குமார் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். பந்தளம் அரண்மனையைச் சேர்ந்த சிறுவன் ரிஷிகேஷ் சபரிமலை மேல்சாந்திக்கான சீட்டை எடுத்தார். திருவனந்தபுரம் ஆற்றுகால் பகவதி அம்மன் கோயில் முன்னாள் மேல்சாந்தியான அருண்குமார் நம்பூதிரி, தற்போது கொல்லத்திலுள்ள லட்சுமிநடை கோயிலில் மேல்சாந்தியாக உள்ளார்.
தொடர்ந்து மாளிகைபுரத்தம்மன் கோயில் மேல்சாந்தி தேர்வு நடந்தது. இதில் கோழிக்கோட்டைச் சேர்ந்த வாசுதேவன் நம்பூதிரி தேர்வு செய்யப்பட்டார். பந்தளம் அரண்மனையை சேர்ந்த சிறுமி வைஷ்ணவி மாளிகைப்புரம் கோயில் மேல்சாந்திக்கான சீட்டை எடுத்தார். புதிதாக தேர்வு செய்யப்பட்டுள்ள மேல்சாந்திகள் கார்த்திகை 1ம் தேதி முதல் சபரிமலையில் பூஜைகளை தொடங்குவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
The post சபரிமலை கோயில் மேல்சாந்தியாக அருண்குமார் தேர்வு appeared first on Dinakaran.