
சபரிமலை,
பங்குனி ஆறாட்டு திருவிழா மற்றும் சித்திரை விஷு சிறப்பு பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த 1ம் தேதி திறக்கப்பட்டது. மறுநாள் (2ம் தேதி) தொடங்கிய திருவிழா 11ம் தேதி நடைபெற்ற ஆறாட்டுடன் நிறைவடைந்தது. கடந்த 14ம் தேதி விஷுக்கணி தரிசனம் நடைபெற்றது. நாளை (18ம் தேதி) வரை சபரிமலை கோவில் நடை திறந்திருக்கும். மண்டல, மகரவிளக்கு காலத்திற்கு அடுத்தபடியாக இந்த மாதம் நீண்ட நாட்கள் நடை திறந்திருப்பதால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து வருகின்றனர்.
இந்த நிலையில்,பம்பையில் இருந்து நிலக்கல்லுக்கு சபரிமலை பக்தர்கள் சென்ற கேரள அரசு பஸ் மீது மரம் ஒன்று திடீரென விழுந்தது. இதில் பஸ்சின் மேற்கூரை சேதமடைந்தது. நல்வாய்ப்பாக பஸ்சில் பயணித்த அய்யப்ப பக்தர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. தகவலறிந்து பம்பையில் இருந்து வந்த தீயணைப்புத் துறையினர் பஸ்சின் மீது விழுந்த மரத்தை அப்புறப்படுத்தி மாற்றுப் பஸ் மூலம் பக்தர்களை அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.