
சென்னை,
தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு பகுதிகளில், கிழக்கு மற்றும் மேற்கு திசை காற்று சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், நாளை முதல் வருகிற 24-ந் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்றும், தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் வழக்கத்தை விட 3 டிகிரி வரையில் வெயில் அதிகரித்து காணப்படும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நேற்று அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102.9 டிகிரி வெயில் பதிவானது. மதுரை நகரத்தில் 101.8 டிகிரியும், கரூர் பரமத்தியில் 101.3 டிகிரியும், திருச்சியில் 100.5 டிகிரியும் வெயில் பதிவானது குறிப்பிடத்தக்கது.