
சிவபெருமானை நினைத்து தியானம் செய்வதற்கும் வழிபடுவதற்கும் பிரதோஷ நேரம் உகந்த நேரமாகும். பிரதோஷ நேரத்தில் சிவாலயம் சென்று சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை.
சனிக்கிழமைகளில் பிரதோஷம் வந்தால் அதை சனி பிரதோஷம் என்று சொல்லப்படுகிறது. இந்த பிரதோஷ காலத்தில் விரதமிருந்து சிவபெருமானையும் சனீஸ்வரரையும் ஒருசேர வழிபடுவது வழக்கம். இந்த நாளில் சிவாலயம் சென்று சனி பகவானை வணங்கி வந்தால் சனி பகவானால் ஏற்பட்ட தோஷம் தீரும் என்பது நம்பிக்கை. அவ்வகையில் சனி பிரதோஷமான நேற்று சிவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் அந்தந்த பகுதி மக்கள் திரளாக கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி ரெயில் நிலைய சந்திப்பில் குகநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவில் 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவில் ஆகும். தஞ்சை பெரிய கோவிலை கட்டுவதற்கு முன்பே மாமன்னன் ராஜராஜ சோழன் இந்த கோவிலை கட்டி உள்ளார். இங்கு குகன் என்ற முருகக்கடவுள் ஈஸ்வரன் என்ற சிவபெருமானை வழிபட்டதால் இந்த கோவிலுக்கு குகநாதீஸ்வரர் கோவில் என்று பெயர் வரக் காரணமாயிற்று. குமரி மாவட்டத்திலேயே மிகவும் உயரமான ஐந்தரை அடி உயர சிவலிங்க சிலை இந்த கோவிலில் அமைந்து உள்ளது சிறப்பாகும்.
இப்படிப்பட்ட வரலாற்று சிறப்புமிக்க இந்த கோவிலில் சித்திரை மாத வளர்பிறை சனிபிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி மாலை 4-30 மணிக்கு நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அப்போது எண்ணெய், மஞ்சள்பொடி, மாபொடி, களபம், பால், தயிர், நெய், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், விபூதி, பன்னீர், சந்தனம் என 13 வகையான வாசனை திரவியங்களால் நந்தீஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இந்த அபிஷேகத்தை கோவில் மேல்சாந்தி ராஜாமணி அய்யர் நடத்தினார்.
பின்னர் 5-30 மணிக்கு மூலவரான சிவபெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதன் பிறகு 6-30 மணிக்கு அலங்கார தீபாராதனை நடந்தது. பின்னர் இரவு 7 மணிக்கு சுவாமி அம்பாளுடன் பல வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரிஷப வாகனத்தில் எழுந்தருளி கோவிலைச் சுற்றி 3 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
அதன் பிறகு பள்ளியறை எழுந்தருளும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கன்னியாகுமரி குகநாதீஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பேரவையினர் செய்திருந்தனர்.
இதேபோல கன்னியாகுமரி சன்னதி தெருவில் உள்ள விஸ்வநாதர் கோவில், கீழ ரதவீதியில் உள்ள சிவன் கோவில், விவேகானந்தபுரம் சக்கர தீர்த்த காசிவிசாலாட்சி சமேத காசிவிஸ்வநாதர் கோவில், பஞ்சலிங்கபுரம் பஞ்சலிங்கேஸ்வரர் கோவில், மகாதானபுரம் காசிவிசுவநாதர் கோவில், கொட்டாரம் வடுகன்ற்று அகத்தீஸ்வரர் கோவில், மருந்துவாழ் மலை ஜோதி லிங்கசாமிகோவில், பரமார்த்தலிங்கசுவாமி கோவில், சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், தேரூர் எடுத்தாயுதமுடைய நயினார் கோவில், குறண்டி சிவன் கோவில் ஆகிய சிவாலயங்களில் சித்திரை மாத வளர்பிறை சனி பிரதோசத்தையொட்டி சிறப்பு அபிஷேகங்களும், விசேஷ பூஜைகளும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

கரூர்
கரூர் மாவட்டம் திருக்காடுதுறை மாதேஸ்வரி அம்பிகை சமேத மாதேஸ்வரன் கோவில், நன்செய் புகளூர் பாகவல்லி அம்பிகை சமேத மேகபாலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு சித்திரை மாத , வளர்பிறை பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் நந்தி பெருமான் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான், மாதேஸ்வரி சமேத மாதேஸ்வரன், பாகவல்லி அம்பிகை, மேகபாலீஸ்வர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல் சேங்கல் மலை வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள நந்தி பெருமான், நொய்யல் அருகே சேமங்கி மாரியம்மன் கோவில் அருகே உள்ள மங்களநாதர் சமேத கமலாம்பிகை கோவிலில் உள்ள நந்தி பெருமான்,புன்னம் சத்திரம் அருகே புன்னம் பகுதியில் உள்ள புன்னைவனநாதர் உடனுறை புன்னைவன நாயகி கோவிலில் உள்ள நந்தி பெருமான், குந்தாணி பாளையம் நத்தமேடு ஈஸ்வரன் கோவிலில் உள்ள நந்தி பெருமான் மற்றும் நொய்யல் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் நந்தி பெருமானுக்கு சித்திரை மாத வளர்பிறை பிரதோஷதை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும், சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. இதில் அந்தந்தப் பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு நந்தி பெருமான் மற்றும் சிவபெருமானை தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
சோழவந்தான்
சோழவந்தான், திருவேடகம், தென்கரை, மன்னாடிமங்கலம், பேட்டை ஆகிய பகுதியில் உள்ள சிவாலயங்களில் சனி பிரதோஷ விழா நடந்தது. பக்தர்கள் குவிந்தனர். சோழவந்தான் பிரளயநாத சுவாமி கோவிலில் நடந்த சனி பிரதோஷ விழாவில் நந்தி பெருமானுக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. இதேபோல் மூலவருக்கு பால், தயிர் உட்பட 12 திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்று சுவாமி அம்பாளும் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர்.
திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் நந்தி பெருமானுக்கும் மூலவருக்கும் சிறப்பு அபிஷேகம், பூஜை நடைபெற்று சுவாமி அம்பாளும் ரிஷப வாகனத்தில் கோவில் வளாகத்தை சுற்றி வந்தனர். மதுரை மற்றும் சுற்றியுள்ள மாவட்டத்திலிருந்து ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர். திருவேடகம் அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத மூல நாத சுவாமி கோவிலிலும் மன்னாடிமங்கலம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் பேட்டை அருணாசல ஈஸ்வரர் ஆலயத்திலும் திருவாளவாயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலிலும் சனி பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், சிறப்பு பூஜை நடைபெற்றது.

செங்கோட்டை
செங்கோட்டை ஆறுமுகசாமி ஒடுக்க கோவிலில் சனிபிரதோஷத்தை முன்னிட்டு சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது. இதில் சுற்றுவட்டார பகுதி பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் நெய், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.
தர்மஸம்வர்த்தினி உடனுறை குலசேகரநாதர் கோவிலில் சுவாமி, அம்பாள் மற்றும் நந்தீஸ்வருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனை நடந்தது. சிவ பக்தர்கள் தேவாரம், திருவாசகம் பாடல்களை பாடி சுவாமியை வழிபட்டனர். இதனை போன்று இலத்தூர், புளியரை மேலூர் இலஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் பிரதோச வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் ஆலயத்தில் உள்ள நந்தி பெருமானுக்கு சித்திரை மாத வளர்பிறை சனி பிரதோஷத்தை முன்னிட்டு பால், தயிர், பன்னீர், இளநீர் ,சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் சுவாமி ரிஷப வாகனத்தில் கோவிலை மூன்று முறை வலம் வந்தார். அதைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பரமேஸ்வரர், நந்தி பெருமான், பரமேஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்தனர்.
பரமத்தி வேலூரில் 400 ஆண்டுகள் பழமையான எல்லையம்மன் ஆலயத்தில் உள்ள ஏகாம்பரேஸ்வரர் கோவில், பரமத்தி வேலூர் அருகே உள்ள பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர், நன்செய் இடையாறு திருவேலீஸ்வரர், மாவுரெட்டி பீமேஸ்வரர், பில்லூர் வீரட்டீஸ்வரர், பொத்தனூர் காசி விஸ்வநாதர், பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிலிக்கல்பாளையம் கரட்டூர் விஜயகிரி வடபழனியாண்டவர் கோயிலில் எழுந்தருளியுள்ள பருவதீஸ்வரர், வெங்கரை, ரகுநாதபுரம் காவிரி கரையில் அமைந்துள்ள ஸ்ரீ ஜலகண்டேஸ்வரர், பரமத்தி வேலூர் வல்லப விநாயகர் கோயிலில் உள்ள விசாலாட்சி சமேத பானலிங்கவிஸ்வேஸ்வரர், வடகரையாத்தூர் சிவன் கோவில் மற்றும் பரமத்தி வேலூர் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் சித்திரை மாத வளர்பிறை சனி பிரதோஷதை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, ஆராதனைகளும்,சிறப்பு அலங்காரமும் நடைபெற்றது. விழாவில் அந்தப் பகுதியை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.