
ஜெய்ப்பூர்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். தொடர் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டது. கடந்த மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கிய இந்த தொடரில் இதுவரை 58 லீக் ஆட்டங்கள் நிறைவு பெற்றுள்ளன. இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தொடரில் இருந்து வெளியேறின. மீதமுள்ள 7 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போட்டியிட்டு வருகின்றன.
இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான சந்தீப் சர்மா விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்த மாத தொடக்கத்தில் தொடரில் இருந்து விலகினார். இதையடுத்து அவருக்கு பதிலான மாற்று வீரரை ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி சந்தீப் சர்மாவுக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவின் நந்த்ரே பர்கரை அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்துள்ளது. இவர் ஏற்கனவே ராஜஸ்தான் அணிக்காக விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.