
இஸ்லாமாபாத்,
இந்திய ராணுவத்தின் 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையை தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ளது. எல்லையில் அத்துமீறி இந்திய பகுதிகளை குறிவைத்து கடந்த சில தினங்களாக பாகிஸ்தான் தாக்க முயற்சித்து வருகிறது. இந்த தாக்குதல் முயற்சியை இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது.
இந்த நிலையில், பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் விமர்சித்துள்ளது. இது குறித்து காங்கிரஸ் ஊடகப் பிரிவு தலைவர் பவன் கேரா அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது;-
"பாகிஸ்தான் திருந்தாது என்பதை உலக நாடுகள் புரிந்து கொள்ள வேண்டும். பஹல்காமில் நடந்த தாக்குதலைப் போல், நாடாளுமன்றம், மும்பை, உரி, பதான்கோட், புல்வாமா என பல தாக்குதல்களை அவர்கள் நடத்தியுள்ளனர். பாகிஸ்தானை உலக நாடுகள் தனிமைப்படுத்த வேண்டியது அவசியமாகும்.
பயங்கரவாதிகளுக்கு பாதுகாப்பு அளித்து வரும் நாட்டிற்கு நிதி வழங்கக் கூடாது என சர்வதேச நாணய நிதியத்திடம் வலியுறுத்தியுள்ளோம். நேற்று பாகிஸ்தான் மீண்டும் நமது நாட்டின் மக்கள் மீது தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. இந்தியா ஒருபோதும் இவ்வாறு செய்தது இல்லை.
பஹல்காம் தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 26 பேர் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடி கொடுத்தபோது இந்திய ராணுவம் பயங்கரவாத முகாம்களை மட்டுமே தாக்கியது. ஆனால் பாகிஸ்தான் தொடர்ந்து அப்பாவி மக்களை தாக்கி வருகிறது. உலக நாடுகள் இதை கவனிக்க வேண்டும்.
தொழில்நுட்ப ரீதியாக இந்தியாவின் கை ஓங்கியுள்ளது என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். இந்தியா ஒருபோதும் பொதுமக்களை தாக்குவதில்லை. சர்வதேச அளவில் பாகிஸ்தானை விட இந்தியா மீதான நம்பகத்தன்மை அதிகமாகும்."
இவ்வாறு அவர் தெரிவித்தார்.