
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன் பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா உலகப்புகழ் பெற்றது. மைசூருக்கு அடுத்தபடியாக இங்கு தசரா திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறும். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து, பல்வேறு வேடமிட்டு அம்மனை தரிசனம் செய்வார்கள். இத்தகைய சிறப்பு வாய்ந்த முத்தாரம்மன் கோவிலில் வருஷாபிஷேக விழா இன்று விமரிசையாக நடந்தது.
வருஷாபிஷேக விழாவிற்காக, அதிகாலை 6 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு மங்கள வாத்தியங்களுடன் யாகசாலை பூஜை தொடங்கியது. தொடர்ந்து அபிஷேக திரவியங்கள் மற்றும் சீர்வரிசைகள் கோவிலைச் சுற்றி ஊர்வலமாக கொண்டு வரப்பட்டன.
அதைத் தொடர்ந்து காலை 10.15 மணிக்கு கோவில் விமானத்திற்கு அபிஷேகம் நடந்தது. அதைத் தொடர்ந்து சங்காபிஷேகமும், முத்தாரம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் நடந்தது. மதியம் 12 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.