சத்ரு பயம் நீக்கும் சண்முகர்

2 hours ago 1

கொல்லிமலையை தலைநகரமாகக் கொண்டு கொங்கு தேசத்தை ஆண்ட சிற்றரசனான வல்வில் ஓரி, ஓர் தீவிர சிவபக்தன். வில்வித்தையில் சிறந்தவன். கடையேழு வள்ளல்களில் ஒருவன். இவன் அம்பு எய்துவதில் வல்லவன் என்றும், மிகுந்த செல்வந்தன் என்றும், வெற்றிவீரன் என்றும், உயரமான கொல்லிமலைக்கு உரியவன் என்றும், புறநானூற்றின் 152வது பாடல் வல்வில் ஓரியைப் பற்றி விரிவாக எடுத்துக் கூறுகின்றது. வல்வில் ஓரியானவன், புலி – காட்டுப்பன்றி – மான் – யானை – உடும்பு ஆகிய ஐந்து மிருகங்களை ஒரே அம்பில் வீழித்தும் வல்லமை உடையவன் ஆவான்.இன்றைய ராசிபுரம், அக்காலத்தில் ராஜபுரமாக திகழ்ந்துள்ளது.

இங்குள்ள வனப் பகுதியில் ஒரு சமயம் வேட்டையாட வந்தான் வல்வில் ஓரி. அப்போது ஓர் வெண்பன்றியை வேட்டையாடத் தீர்மானித்து, அம்புகள் எய்தினான். வில்வித்தையில் வல்லவனான ஓரியின் அம்பு ஒன்றுகூட பன்றியின் மீது படவில்லை. இறுதியில் அம்புகள் தீர்ந்தன. வியப்படைந்தான். அதோடு, கோபம் மிகுதியால் தனது வாளால் அப்பன்றியை வெட்டினான். அப்போது வெண்பன்றி மறைந்தது. அங்கே சுயம்புலிங்கம் வெளிப்பட்டது. கத்தியால் வெட்டுப்பட்ட சிவலிங்கத்தின் முடிவில் இருந்து ரத்தம் பீரிட்டது. பதறிய ஓரி, பரமனிடம் மன்னித்தருள வேண்டினான்.

பெருங்கருணாமூர்த்தியான சர்வேஸ்வரர் தனக்கு ஆலயம் எழுப்ப வேண்டும் என அசரீரி வாயிலாக அறிவித்தார்.அதன்படியே ஆலயம் எழுப்பினான் வல்வில் ஓரி. ஈசனுக்கு கயிலாசநாதர் என்றும், அன்னைக்கு அறம்வளர்த்தநாயகி என்றும் பெயரிட்டு மகிழ்ந்தான். நான்கு யுகங்களாய் நிலைத்திருக்கும் இத்தல ஈசரை இந்திரன் முதலான தேவர்களும், நவக்கிரகங்களும், பூஜித்துள்ளனர். அதோடு, முனிவர்கள் பலரும், சித்தப்புருஷர்களும் வணங்கிய பெருமான் இவர். ஆதி சைவர்களும் போற்றிய நாதராகத் திகழ்கின்றார் ஸ்ரீ கயிலாசநாதர்.முதல் யுகமான க்ருத யுகத்தில் இத்தலம் ஜம்புவனமாகவும் (நாவல் காடு), இத்தல ஈசர் நீலகண்டர் என்றும், இப்பதி இந்திரபுரம் என்றும் விளங்கியது.

இரண்டாம் யுகமான த்ரேதாயுகத்தில் வேணுவனமாகவும் (மூங்கில் காடு), இவ்வீசர் சித்தேஸ்வரர் என்றும், இப்பதி தேவபுரமாகவும் திகழ்ந்துள்ளது. மூன்றாம் யுகமான துவாபர யுகத்தில் வில்வ வனமாகவும், ஈசர் சந்திரசேகரர் என்றும், இந்த பதி விசித்திரபுரம் என்றும் ஆகியுள்ளது. நான்காவது யுகமான இந்த கலியுகத்தில் ஆமல வனமாகவும் (நெல்லி மரக்காடு) ஸ்வாமி கயிலாசநாதர் என்றும் இப்பதி ராஜபுரமாகவும் மாற்றமடைந்துள்ளது.கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோயில். மேற்கே அமைந்த ஐந்துநிலை ராஜகோபுரம். அதன் முன்னே முன்மண்டபம். கீழிறங்கும் படிகள். இறங்கி உள்ளே செல்ல….இடப்புறம் பஞ்சலிங்க தரிசனம்.

பின் தனித்தனி சந்நதிகளில் வீற்றருளும் சரஸ்வதி மற்றும் கஜலட்சுமி. நேராக நந்தி மண்டபம். இங்கு நந்தி தேவரின் அழகும் பாவமும் நம்மை மெய்சிலிர்க்கச் செய்கிறது.இரண்டாம் வாயில் வழியே சென்றால், இங்கு மூன்று சந்நதிகள் காணப்படுகின்றன. ஈசன் சந்நதி மேற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் ஆதிநாதனாக, அற்புத லிங்கத் திருமேனி கொண்டு அருள்மழைப் பொழிகின்றார் ஸ்ரீ கயிலாசநாதர். முடியில் வெட்டுப்பட்டத் தழும்புடன் திகழ்கின்றார். ஸ்வாமிக்கு நேர் எதிரே அம்பிகையின் சந்நதி கிழக்கு முகமாக உள்ளது. மாலை மாற்றும் கோலத்தில் அருட்பிரவாகிக்கின்றாள் அன்னை ஸ்ரீ தர்மசம்வர்த்தினி. தீந்தமிழில் அறம்வளர்த்தநாயகி என்று அழைக்கப்படுகின்றாள். ஆலய வலம் வருகையில், வடகிழக்கில் ஸ்ரீ பைரவர் அருள் பாலிக்கின்றார்.

கிழக்குத் திருமாளிகைப்பத்தியில் ஸ்ரீ காசி விஸ்வநாதர் – விசாலாட்சி அம்மன் காணப்படுகின்றனர். இங்கு கடையேழு வள்ளல்களில் இன்னொருவரான காரியின் சிலை காணப்படுகின்றது. தென்புறத்தில் நால்வர், சந்தானக்குரவர்கள் மற்றும் வீரபத்திரர் சிலைகள் உள்ளன. இங்கே 63 நாயன்மார்கள் வீற்றருள்கின்றனர். ராமலிங்கரும் உடனுள்ளார்.ஆலயத் தென்மேற்கில் கையில் ருத்ராட்சத்துடன் திருவருள் புரிகின்றார் தல கணபதியான ஸ்ரீ சகட விநாயகர். மேற்குப் புறமாக தல விருட்சமான வன்னி மரமும் அதன் கீழே வல்வில் ஓரியின் சிலையும் ஸ்தாபிக்கப்பட்டுள்ளன. அருகே நாகர் மேடையும் அமைந்துள்ளன. ஒரே திருச்சுற்றுடைய ஆலயம், எப்போதும் பக்தர்கள் வழிபட்டவண்ணம் உள்ளனர்.

இத்தலத்திற்கு மொத்தம் நான்கு தீர்த்தங்கள் உள்ளன.

1.சிவகங்கை தீர்த்தம்,
2.பாப விநாச தீர்த்தம்,
3.ரோக விநாச தீர்த்தம் மற்றும்
4.மங்கள தீர்த்தம் ஆகியனவாகும்.

இவ்வாலய விசேடங்களாக…. பிரதி மாதப்பிறப்பு அன்று சிறப்பு அபிஷேகமும், பிரதிமாதம் முதல் வியாழன் அன்று தட்சிணாமூர்த்தி உற்சவருக்கு சிறப்பு அபிஷேகமும் நடக்கின்றது. வருடாந்திர விசேஷங்களாக…..சித்ரா பௌர்ணமியில் கொடியேற்றத்துடன் கூடிய பிரம்மோற்சவமும், அதில் திருத்தேர் விழாவும் சிறப்புடன் நடைபெறுகின்றது. வைகாசி விசாகம் முருகனுக்கு சிறப்பு அபிஷேக – அலங்காரங்கள் நடைபெறுகின்றன. ஆடி சுவாதி சுந்தரர் குருபூஜை மற்றும் 63 நாயன்மார்கள் விழா, ஐப்பசி அன்னாபிஷேகம், புரட்டாசியில் நவராத்திரி, ஐப்பசி அன்னாபிஷேகம், கார்த்திகை மாதம் ஏகாதச ருத்ர பாராயணம் மற்றும் ஏகாதசி ருத்ராபிஷேகம், தைப்பூசம், மாசிமகம், பங்குனியில் திருக்கல்யாண உற்சவம் ஆகியன வெகு சிறப்புடன் அனுசரிக்கப்படுகின்றன.இங்கு முருகருக்கு சத்ரு சம்ஹார திரிசதி பாராயணமும், சத்ரு சம்ஹார வேள்வியும் சிறப்புடன் நடைபெறுகின்றது. அதில் பங்கு கொண்டு பக்தர்கள் கடன் நிவர்த்தி, நோய் நிவர்த்தி, சத்ரு தொல்லைகளிலிருந்து நிவர்த்தி தொழில் மேன்மை, விவாகத்தடை குழந்தைப்பேறு ஆகிய வரங்களை பெற்று மகிழ்கின்றனர். பிரதி மாதம் வளர்பிறை சஷ்டியன்று ஆறுமுகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து, பச்சை வஸ்திரம் சாற்றி, ஆறு நிவேதனங்கள், ஆறு பழங்களைப் படைத்து மேற்கண்ட வரங்களை சிறப்புடன் பெற்று செல்கின்றனர் பக்தர்கள்.
தினமும் இரண்டு கால பூஜைகள் நடைபெறும் இவ்வாலயம் தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 4:30 மணி முதல் 8 மணி வரை திறந்திருக்கும்.

பழங்காமூர் மோ.கணேஷ்

The post சத்ரு பயம் நீக்கும் சண்முகர் appeared first on Dinakaran.

Read Entire Article