ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

1 hour ago 1

மீனம்பாக்கம்: ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஜெர்மன் நாட்டின் ஃபிராங்க்பார்ட் நகரில் இருந்து லுப்தான்ஷா ஏர் லைன்ஸ் பயணிகள் விமானம் 274 பயணிகளுடன் சென்னைக்கு நேற்று புறப்பட்டது. இந்த விமானம் நள்ளிரவு 12 மணிக்கு, சென்னை சர்வதேச விமான நிலையத்தில் தரை இறங்க வேண்டும். இதற்கிடையில் இரவு 11 மணியளவில், சென்னை விமான நிலையத்திற்கு ஒரு இ-மெயில் வந்தது. அதில், ‘ஜெர்மன் நாட்டிலிருந்து, சென்னைக்கு வந்து கொண்டிருக்கும் லுப்தான்ஷா ஏர்லைன்ஸ் விமானத்தில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளன’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக விமான நிலைய பாதுகாப்பு குழுவின் அவசர கூட்டம், சென்னை விமான நிலையத்தில் உயரதிகாரிகள் தலைமையில் நடந்தது. அதில், நள்ளிரவு 12.15 மணிக்கு, சென்னையில் தரை இறங்குவதற்காக வந்து கொண்டிருக்கும் விமானத்தை முழுமையாக சோதனையிட முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள், அதிரடிப்படை வீரர்கள், விமான பாதுகாப்பு படையினர் பெருமளவு குவிக்கப்பட்டனர். விமானம் நள்ளிரவு 12.16 மணிக்கு சென்னையில் தரை இறங்கியதும், வெடிகுண்டு நிபுணர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை முழுமையாக பரிசோதித்தனர். பயணிகள் அனைவரும் உடனடியாக வெளியேற்றப்பட்டு சோதனையிடப்பட்டனர். மேலும், சந்தேகப்படும் படியாக இருந்த பயணிகள் மற்றும் அவர்களது கைப்பைகள், உடைமைகள் பரிசோதிக்கப்பட்டன. சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக இந்த சோதனை நடந்தது. குண்டுகள் எதுவும் இல்லை. புரளி என தெரிய வந்தது.

இந்த விமானம் வழக்கமாக நள்ளிரவு 12 மணிக்கு வந்துவிட்டு, மீண்டும் அதிகாலை 2 மணிக்கு ஜெர்மன் நாட்டிற்கு புறப்பட்டு செல்லும். இந்த வெடிகுண்டு சோதனை காரணமாக 2 மணி நேரம் தாமதமாக, இன்று அதிகாலை 4 மணிக்கு 265 பயணிகளுடன் ஃபிராங்க் பர்ட் நகருக்கு புறப்பட்டது. இதனால் நள்ளிரவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு புரளி சம்பவம் குறித்து சென்னை விமான நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post ஜெர்மனியில் இருந்து சென்னை வந்த லுப்தான்சா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் appeared first on Dinakaran.

Read Entire Article