சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி!

1 month ago 4

விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கார்த்திகை மாத வழிபாட்டுக்காக மலையேறி சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி வழங்கியுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ளது சதுரகிரி சுந்தர மகாலிங்கம் சுவாமி கோயில். சுமார் 4,500 அடி உயரத்தில் இருக்கும் பிரசித்தி பெற்ற இந்த கோயிலுக்கு அடர்ந்த வனப்பகுதிகளை கடந்து கரடுமுரடான மலை பாதையில் 10 கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டும்.

சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமி நாட்களில் பக்தர்கள் சென்று வழிபாடு நடத்த அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பிரதோஷம் மற்றும் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய 4 நாட்கள் கோவில் நிர்வாகத்தினர் மற்றும் வனத்துறையினர் அனுமதி அளித்துள்ளனர். பக்தர்கள் காலை 6 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே மலையேறி சென்று சாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மேலும் இரவில் பக்தர்கள் கோவிலில் தங்குவதற்கு அனுமதி கிடையாது.

நீரோடை பகுதிகளில் பக்தர்கள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட நாட்களில் எதிர்பாராதவிதமாக மழை பெய்தால் பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சாமி தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்படும் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர். தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 

The post சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதி! appeared first on Dinakaran.

Read Entire Article