பெங்களூரு: துறைமுகத்தில் இருந்து சட்டவிரோதமாக இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்ட வழக்கில் கர்நாடக காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் சைலுக்கு 7 ஆண்டு சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கர்நாடக மாநிலம் பெலெகெரெ துறைமுகத்தில் இருந்து சட்டவிரோதமாக இரும்புத்தாது ஏற்றுமதி செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக 2012ம் ஆண்டு சிபிஐ ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தது. இதில் தொடர்புடையதாக கார்வார் காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் சைல், துறைமுக கண்காணிப்பாளர் மகேஷ் பிலியே மற்றும் இரும்புத்தாது நிறுவன உரிமையாளர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. மேலும் 5 லட்சம் மெட்ரிக் டன் இரும்பு தாது பறிமுதல் செய்யப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த பெங்களூரு மக்கள் பிரதிநிதிகள் நீதிமன்றம் சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதியில் 6 வழக்குகளிலும் காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் சைலுக்கு தொடர்பு இருப்பதை உறுதி செய்து அக்.24ம் தேதி குற்றவாளி என அறிவித்தது. மேலும் இரும்புத்தாது கம்பெனி உரிமையாளர்கள் 6 பேரையும் குற்றவாளி என்று உறுதி செய்தது. இதன் மீதான தண்டனை விவரத்தை நேற்று நீதிமன்றம் அறிவித்தது. இந்த வழக்கில் கார்வார் எம்எல்ஏ சதீஷ் சைலுக்கு மோசடி வழக்கில் 7 ஆண்டு சிறையும், சூழ்ச்சி செய்ததற்காக 5 ஆண்டு சிறையும், இரும்பு தாது திருட்டு வழக்கில் 3 ஆண்டு சிறையும் விதிப்பதாக நீதிபதி தெரிவித்தார். இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் சேர்த்து மொத்தம் ரூ.40 கோடி அபராதம் விதிப்பதாக தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பின் மூலம் காங்கிரஸ் எம்எல்ஏ சதீஷ் சைல் தனது பேரவை உறுப்பினர் பதவியை இழப்பார் என்று தெரியவருகிறது.
The post சட்டவிரோத இரும்புத்தாது ஏற்றுமதி வழக்கில் கர்நாடக காங்.எம்எல்ஏவுக்கு 7 ஆண்டு சிறை: 6 குற்றவாளிக்கும் ரூ.40 கோடி அபராதம் appeared first on Dinakaran.