
அ.ம.மு.க. கட்சியின் புதிய தலைமை அலுவலகம், சென்னை அடையாறு கற்பகம் தோட்டம் பகுதியில் கட்டப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்துகொண்டு, புதிய அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும் அங்கு அமைக்கப்பட்டிருந்த 60 அடி கம்பத்தில் கட்சி கொடியேற்றினார். பின்னர் பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த டி.டி.வி. தினகரன் கூறியதாவது:-
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது. கொலை, கொள்ளை வழிப்பறி, பாலியல் குற்றங்கள், போதை கலாசாரம் ஆகியன வெகுவாக அதிகரித்துள்ளன. மக்களுக்கு தி.மு.க. அரசின் மீது உள்ள கோபத்தை திசை திருப்பும் வகையில், மத்திய அரசு மறைமுகமாக இந்தியை திணிப்பதாக தி.மு.க.வும், அதன் கூட்டணி கட்சிகளும் பொய் பிரசாரம் செய்து வருகின்றனர்.
எங்களுக்கு இருமொழி கொள்கையே போதும் என மத்திய அரசிடம், மாநில அரசு தெரிவிக்க வேண்டியது தானே. இந்த விஷயத்தில் அரசியல் செய்யாமல் மத்திய அரசை அணுகி தேவையான நிதியை பெற தமிழக அரசு முயற்சிக்க வேண்டும். அரசு பள்ளி மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ.க்கு இணையான தரமான கல்வியை கொடுக்க முன்வர வேண்டுமே தவிர மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என்று அரசியல் செய்வதை தி.மு.க. நிறுத்திக்கொள்ள வேண்டும்.
இப்போதும் நாங்கள் பா.ஜ.க. கட்சியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் நீடிக்கிறோம். 2026 சட்டமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி தி.மு.க. கூட்டணிக்கு எதிராக பலமான கூட்டணியாக இருக்கும். தி.மு.க.வுக்கு இந்த தேர்தலில் மக்கள் 'கெட்அவுட்' சொல்வது நிச்சயம். இவ்வாறு அவர் கூறினார்.