
ஜெய்ப்பூர்,
10 அணிகள் இடையிலான 18-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடரில் ஜெய்ப்பூரில் நேற்று நடைபெற்ற 66-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின.
இதில் டாஸ் வென்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 206 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் ஐயர் 53 ரன்கள் அடித்தார். டெல்லி அணியின் சார்பில் அதிகபட்சமாக முஸ்தாபிசுர் ரகுமான் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
பஞ்சாப் அணி நடப்பு ஐ.பி.எல். தொடரில் 200+ ரன்கள் அடிப்பது 7-வது முறையாகும். 7 முறையும் முதலில் பேட்டிங் செய்தே அவர்கள் அடித்துள்ளனர். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு தொடரில் முதலில் பேட்டிங் செய்து அதிக முறை 200+ ரன்கள் அடித்த அணி என்ற சரித்திர சாதனையை படைத்துள்ளது.
அத்துடன் ஒரு டி20 தொடரில் அதிக முறை 200+ ரன்கள் அடிகளின் சாதனை பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் (ஐ.பி.எல். தொடரில் 7 முறை) மற்றும் வார்விக்ஷயர் (டி20 பிளாஸ்ட் தொடரில் 7 முறை) ஆகிய அணிகளுடன் முதலிடத்தை பகிர்ந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி அணி 19.3 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்த டெல்லி அணி 208 ரன்கள் அடித்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. டெல்லி தரப்பில் சமீர் ரிஸ்வி 58 ரன்களும், கருண் நாயர் 44 ரன்களும் அடித்தனர். பஞ்சாப் தரப்பில் ஹர்ப்ரீத் பிரார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.