சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடத்தை தமிழக ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் - நயினார் நாகேந்திரன்

3 hours ago 1

சென்னை,

தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னையில் பணி நிரந்தரம் வழங்கக் கோரி போராட முயன்ற பகுதி நேர ஆசிரியர்களைக் கைது செய்திருப்பதோடு 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவும் செய்துள்ள திமுக அரசின் அராஜகத்தை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

திமுக-வின் ஆட்சியில் அடிப்படை உரிமைகளைப் பெறுவதற்குக்கூட அரசு ஊழியர்கள் முதல் பாமர மக்கள் வரை அனைவரும் தெருவில் இறங்கிப் போராடும் நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது தான் நிதர்சனம். இந்நிலையில், நியாயமாக கிடைக்க வேண்டிய பணிநிரந்தரத்தைக் கேட்டு போராட முயன்ற ஆசிரியர்கள் மீது அடக்குமுறையை கட்டவிழ்த்து விடுவது எந்த வகையில் நியாயம்?

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு, தாங்கள் எதிர்கட்சியாக இருக்கும் போது போராட்டத்திற்கு ஆதரவளித்ததும், ஆட்சி கட்டிலில் ஏறுவதற்காக தேர்தல் வாக்குறுதி எண் 181 கீழ் பணிநிரந்தரம் செய்யப்படும் என உறுதியளித்ததும், நான்காண்டு கால ஆட்சியில் மறந்துவிட்டதா? அல்லது கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்கவிட்டு ஆசிரியர்கள் நலனை அலட்சியப் படுத்துவதுதான் திராவிட மாடலா?

அராஜகப் போக்குடன் வழக்கு பதிந்து அரசு ஊழியர்களை அவமதித்து அலைக்கழிக்கும் இந்த திமுகவின் ஆணவமே அதன் அழிவுக்கு அடித்தளமிடும். வரும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு தக்க பாடத்தை தமிழக ஆசிரியர்கள் கற்பிப்பார்கள் என்பது உறுதி!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Read Entire Article