சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது ஏன்?.. எடப்பாடி பழனிச்சாமி பேட்டி

1 week ago 7

சென்னை: சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்த பின்னர் நிருபர்களிடம், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிச்சாமி கூறியதாவது: தி.மு.க ஆட்சிக்கு வந்தால் பேரவை உறுப்பினர்களின் உரையாடல்கள் நேரலை செய்யப்படும் என வாக்குறுதி அளித்து, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை அதனை நிறைவேற்றவில்லை. குறிப்பாக தமிழக சட்டப்பேரவையில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள எதிர்க்கட்சி தலைவருக்கு தான் முதலில் பேசுவதற்கு வாய்ப்பளிக்க வேண்டுமே தவிர, மற்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கு முதலில் பேசுவதற்கு வாய்ப்பு அளிக்கக்கூடாது. நேரமில்லா நேரத்தில் பிரதான எதிர்க்கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில் கேள்வி எழுப்ப முற்பட்ட பொழுது, தனக்கு வாய்ப்பளிக்காமல், பிற கட்சிக்கு வாய்ப்பு அளிப்பது என்ன நியாயம்?

குறிப்பாக நடைபெற்று வரும் பேரவை கூட்டத் தொடரின் போது கவன ஈர்ப்பு தீர்மானத்தில் உரையாற்றிய சி.விஜயபாஸ்கர், அக்ரி கிருஷ்ணமூர்த்தி ஆகியோரின் உரையாடல்களை நேரலை செய்யாமல், இருட்டடிப்பு செய்யப்பட்டுள்ளது. எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பேசுவதை நேரலை செய்யாமல், அமைச்சர்களும், முதலமைச்சரும் பேசுவதை மட்டும் நேரலை செய்வதினால் மக்களுக்கு எப்படி புரியும். தி.மு.க.விற்கு இன்னும் ஒன்பது மாதங்கள் மட்டுமே காலம் உள்ளது. வருகிற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் ஆதரவோடு மகத்தான வெற்றியை அதிமுக பெற்று, ஆட்சி அமைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

The post சட்டசபையில் இருந்து அதிமுக வெளிநடப்பு செய்தது ஏன்?.. எடப்பாடி பழனிச்சாமி பேட்டி appeared first on Dinakaran.

Read Entire Article