மாமல்லபுரம்: மாமல்லபுரத்தை அடுத்த திருவிடந்தையில் நடைபெற உள்ள சித்திரை முழு நிலவு வன்னியர் சங்க பெருவிழா மாநாட்டுக்கான பந்தக்காலை, திருமண வீடுகளில் நடப்பது போல நாதஸ்வரம், மேளதாலம் முழங்க ஆகம முறைப்படி நட்ட பாமக தலைவர் அன்புமணி, தமிழக வளர்ச்சிக்கான மாநாடாக அமையும் என தெரிவித்தார்.
பாட்டாளி மக்கள் கட்சி மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு, மாமல்லபுரத்தில் 1998-ம் ஆண்டு முதல் 2013-ம் ஆண்டு வரை தொடர்ச்சியாக நடைபெற்று வந்தது. கடந்த 2013-ம் ஆண்டு மாமல்லபுரத்தில் கடைசியாக நடைபெற்ற சித்திரை பெருவிழாவையடுத்து அந்த விழா, தொல்லியல் துறை தடை உத்தரவால் கடந்த 12 ஆண்டுகளாக மாமல்லபுரத்தில் நடத்தப்படவில்லை.