சங்கடங்கள் தீர்க்கும் சந்திரகண்டா தேவி

17 hours ago 3

மார்க்கண்டேய மகரிஷி ஒரு முறை பிரம்மாவை, மிகவும் ரகசியமானதும் அதிக பலன் தருவதுமான ஒரு துதியை சொல்லும்படி கேட்க, பிரம்மா, தேவியின் ஒன்பது வடிவங்களின் நாமங்களை சொன்னார். பிரம்மா பட்டியலிட்ட இந்த தேவியின் ஒன்பது வடிவங்களே துர்கா தேவியின் ஒன்பது வடிவங்கள். இவர்களை கூட்டாக நவ துர்க்கை என்றும் சொல்கிறார்கள்.

இந்த நவதுர்கா தேவிகளின் நாமத்தை எப்போதும் ஜபிப்பவனுக்கு வாழ்வில் ஒரு குறையும் வராது, அபமிருத்யு வராது, சோகம் வராது, எப்போதும் வெற்றியே ஏற்படும் என்று பிரம்மா, தேவியின் இந்த ஒன்பது நாமங்களை ஜபிப்பதால் வரும் பலனை பட்டியலிட்டுக் கொண்டே செல்கிறார். மேலே நாம் கண்ட இந்த வரலாறு மார்க்கண்டேய புராணத்தில் இருக்கிறது.இப்படி அதிக சக்தி வாய்ந்த தேவியின் ஒன்பது வடிவங்களில் மூன்றாவது வடிவமாக வழங்கப்படுவதே, சந்திரகண்டா துர்காதேவியின் வடிவம். இந்த தேவியின் மகிமையைப் பற்றி காண்போம் வாருங்கள்.

சந்திரனின் குளுமையும் சந்திரகண்டா துர்கையும்

முக்கணியை தொழுவார்க்கு ஒரு தீங்கும் இல்லையே என்று, அபிராமி பட்டர் சொன்னதற்கு ஏற்ப, மூன்று கண்கள் கொண்ட இந்த தேவியை வணங்கினால் வாழ்வில் ஒரு குறையும் இருக்காது.
பொதுவாகத் துன்பம் ஏதேனும் வந்தால், எனது வயிறு எரிகிறது என்று சொல்கிறோம். அதேபோல மனதில் பெரும் துன்பம் ஏற்பட்டால் மனது வலிக்கிறது என்றும் மனது எரிகிறது என்றும் சொல்கிறோம். எதிரிகளின் வஞ்சகத்தையும் வஞ்சக வெப்பம் என்றே சொல்கிறோம். ஆக மொத்தத்தில், மனிதனுக்கு வாழ்வில் ஏற்படும் அனைத்துத் துன்பத்தையும் ஒரு வெப்பம் போலக்கருதுவதே மரபாக உள்ளது.

இப்படி வாழ்வில் மனிதனுக்கு ஏற்படும் பலவிதமான துன்பங்களில் இருந்து பக்தனை காப்பதால், இந்த துர்க்கைக்கு சந்திரகண்டா என்று பெயர். சந்திரகாந்தக் கல் எப்படி வெப்பத்தை தனக்குள் ஈர்த்துக் கொண்டு, குளிர்ச்சியான நீரைத் தருகிறதோ, அதுபோல நமது கவலை கஷ்டம் என்னும் வெப்பத்தை தணித்து, தனது கருணை என்னும் குளிர்ச்சியான நீரைப் பொழிகிறாள் இந்த தேவி. ஆகவே, இவளை சந்திரகண்டா என்று அழைக்கிறோம்.

ராகுகால வழிபாடும் சந்திரகண்டா தேவியும்

பொதுவாகவே துர்காதேவியை ராகு காலத்தில் வழிபடுவது சிறந்த பலனைத் தரும் என்று நாம் அனைவரும் அறிவோம். அதிலும் ராகு கால வேளையில், செவ்வாய்க் கிழமைகளில் இந்த சந்திரகண்டா தேவியை வழிபட்டால் அனைத்து விதமான நன்மையும் ஏற்படும். ஜாதகத்தில் ராகுவினால் ஏற்பட்ட தோஷங்களும், சங்கடங்களும் இந்த தேவியை வணங்க விலகும்.

சந்திரகண்டா தேவியும் சிம்ம வாகனமும்

இந்த தேவியின் வாகனம் சிங்கம் ஆகும். ஆகவே இந்த தேவியை வணங்குபவன், சக்திசாலியாகவும், பராக்கிரமசாலியாகவும், பயமில்லாதவனாகவும் வாழ இந்த தேவி அருள்கிறாள் என்பது இதிலிருந்து விளங்கும். அதே போல இந்த தேவி, யுத்தத்திற்கு புறப்பட்ட நிலையில் காணப்படுகிறாள். ஆகவே, இந்த தேவியை வணங்குபவரின் கஷ்டங்களை நீக்குவதில், தாமதமே ஏற்படுவதில்லை. பக்தனின் எதிரிகள் நொடியில் நசுக்கப் படுகிறார்கள். இந்த அம்பிகையின் கையில் இருக்கும் மணியின் ஓசையால், பக்தனுக்கு பூத பிரேத பிசாசுகளினால் ஏற்படும் பிரச்னைகள் நொடியில் நீங்குகிறது. இப்படி இந்த தேவியின் மகிமையைச் சொல்லிக் கொண்டே போகலாம்.

முக்கண்ணும் ஆயுதங்களும்

ஒரு தாய் எப்படி தனது குழந்தையை பாலூட்டி வளர்க்கிறாளோ அதுபோல இந்த தேவி, தனது மூன்று கண்களால் உலகைக் காக்கிறாள். ஆகவே அம்பிகையின் மூன்று கண்களைச் சூரியன் சந்திரன் மற்றும் அக்னி என்று சொல்கிறோம். இந்த மூன்றும் எப்போதும் எல்லா இடங்களிலும் இருக்கிறது. ஆகவேதான், ஒரு மனிதன் தவறு செய்ய செல்லும் போது, மூன்றாவது கண்ணனுக்கு தெரியாமல் செய்துவிட்டு வா என்று சொல்லும் வழக்கமும் வந்தது. அம்பிகை எப்போதும் அனைத்தையும் கவனித்துக் கொண்டே இருக்கிறாள், ஆகவே நீ அவளுக்கு தெரியாமல் தவறு செய்ய முடியாது என்பதைத் தான், அப்படி நமது பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அதேபோல இந்த தேவி, சங்கு சக்கரம், வில் கதை அம்பு போன்ற ஆயுதங்களைத் தாங்கியவளாகத் தரிசனம் தருகிறாள். இந்த ஆயுதங்கள், நாம் செய்த தீவினை என்ற அரக்கர்களை அழித்து நமக்கு நன்மையை செய்கின்றன என்பது மகான்களின் முடிவான முடிவு.இந்த தேவி துஷ்டர்களை அழிப்பதில் எந்த அளவுக்கு, கொடூரத்தைத் காட்டுகிறாளோ, அதைவிட பன்மடங்கு அதிகமாக அன்போடும், கருணையோடும் தனது பக்தர்களுக்கு அருள் செய்கிறாள்.

திருவாலங்காடும் சந்திரகண்டா தேவியும்

திருவாலங்காட்டில் காளிதேவியோடு, ஈசனுக்கு நடனப்போட்டி நடந்தது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே. அப்படி காளியை தோற்கடிக்க ஈசன் ஆடிய ஆடலுக்கு ஊர்த்துவ தாண்டவம் என்று பெயர். ஒரு காலைத் தரையில் ஊன்றி மற்றொரு காலைத் தோளுக்கு மேலே உயர்த்தி ஈசன் ஆடிய இந்த ஆடலில் இருந்து தோன்றிய தேவியே சந்திரகண்டாதேவி என்று சிவ ஆகம நூல்கள் சொல்கின்றன.

சந்திரகண்டா தேவியின் உபாசகன்

இந்த தேவியை ஒருவன், உபாசிக்கவோ வணங்கவோ வேண்டும் என்றால், அவன் நற்குணங்கள் நிறைந்தவனாக இருக்க வேண்டும். அம்பிகையை உபாசிப்பதில், வைராக்கியமும், வீரமும், இருப்பவனாக இருக்க வேண்டும். உபாசனையில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்ற வெறி உள்ளவனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஒருவனுக்கே இந்த தேவியின் உபாசனை செய்ய வாய்ப்பு கிடைக்குமாம்.

இந்த தேவியை உபாசிப்பவனின் கண்களில் திவ்ய தேஜஸ் தெரியும் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. உடல் முழுவதும் ஒரு ஞானஒளி வீசுமாம். இசையில் நல்ல தேர்ச்சி ஏற்படும். இந்த அம்பிகையை உபாசிப்பவர் எங்கு சென்றாலும் அவரை கண்ட மாத்திரத்திலேயே மக்கள், சாந்தி, அமைதி, தெய்வீகம் போன்றவற்றை உணர்வார்கள்.

இந்த தேவியை உபாசிப்பவனின் தேகத்தில் இருந்து ஒருவிதமான திவ்வியமான, தெய்வீகமான ஒரு பிரகாசம் தோன்றிக் கொண்டேயிருக்குமாம். இந்த பிரகாசத்தை, நம்மைப் போன்ற சாதாரண மனிதர்களால் உணர முடியாதாம். நல்ல தபசும், உபாசனையும் உள்ள மற்றொருவரால்தான் இதை உணரமுடியுமாம். இப்படி தேவி தன்னுடைய பக்தர்களுக்கு அதீத அருளைச்செய்கிறாள்.

சந்திரகண்டா தேவியும் மணிஒலியும்

இந்த தேவியின் கழுத்தில் அர்த்த சந்திர வடிவில் ஒரு மணி எப்போதும் தென்படு வதால் இவளை சந்திரகண்டா தேவி என்று சொல்கிறார்கள் என்று அபிப்பிராயப்படுபவர்களும் உண்டு. திரிகரண சுத்தியோடு பூஜிப்பவர்களுக்கு விசித்திரமான பலசித்திகள் ஏற்படும். விசித்திரமான தெய்வீகமான பல வஸ்துக்கள் இவர்களின் கண்களுக்கு புலப்படும். வானில் உலாவும் தேவர்கள் கந்தர்வர்கள் போன்றவர்களை காண முடியும். தெய்வீக சுகந்தத்தை எப்போதும் இவர்களால் உணர முடியும்.

எங்கிருந்தோ ஒரு தெய்வீகமான தேவகானம் இவர்களுக்கு கேட்குமாம். இதுபோன்ற சமயங்களில், இந்த சித்திகளில் மனதைச் செலுத்தாமல் அம்பிகையை அடைவதிலேயே மனதை ஒருமுகப்படுத்தி சாதனையில் முன்னேற வேண்டும். இந்த அம்பிகையின் சாதனை நிறைவு அடையும்போது அல்லது வெற்றி அடையும்போது, ஒரு தெய்வீகமான மணி ஒலி கேட்குமாம். இந்த காரணம் பற்றியும் இந்த தேவியை சந்திரகண்டா என்று அழைக்கிறார்கள்.

குண்டலினி யோகமும் சந்திரகண்டா தேவியும்

நவராத்திரியின் மூன்றாவது நாள், இந்த தேவியை வழிபடுவது அதீத பலனைக் கொடுக்கும்.
“பிண்டஜ ப்ரவராரூடா சண்ட கோபா அஸ்த்ரகைர்யுதா
பிரசாதம் தனுதே மஹ்யம் சந்திரகண்டேதி விஷ்ருதா’’
என்ற தியான ஸ்லோகம் சொல்லி தேவியை எளிமையாக வழிபடலாம்.

மேலும், குண்டலினி யோகமும் பயிலும் சித்தர்களும் முனிவர்களும், இவளை மணிபூரக சக்கரத்தில் வைத்து ஆராதித்து, மாபெரும் சித்திகளை அடைகிறார்கள் என்று சாஸ்திரங்கள் சொல்கிறது. நாமும் பல நலங்களைத் தரும் இந்த தேவியை பணிந்து பெறுதற்கு அரிய பல நன்மைகளை அடைவோம்.

ஜி.மகேஷ்

The post சங்கடங்கள் தீர்க்கும் சந்திரகண்டா தேவி appeared first on Dinakaran.

Read Entire Article