ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் அணிக்கு எதிரான பரபரப்பான ஆட்டத்தில் லக்னோ அணி, 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஐபிஎல் 36வது லீக் போட்டியில், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. முதலில் களமிறங்கிய லக்னோ அணியின் துவக்க வீரர்களில் ஒருவரான மிட்செல் மார்ஷ் (6 ரன்), ஜோப்ரா ஆர்ச்சர் பந்தில் வீழ்ந்தார். மற்றொரு துவக்க வீரர் அய்டன் மார்க்ரம் நிலைத்து ஆடிய போதிலும், நிகோலஸ் பூரன் (11 ரன்), கேப்டன் ரிஷப் பண்ட் (3 ரன்), அடுத்தடுத்து அவுட்டாகினர். அதன் பின்னர், அய்டன் மார்க்ரமும், ஆயுஷ் படோனியும் சேர்ந்து சிறப்பாக ஆடி 49 பந்துகளில் 76 ரன்களை குவித்திருந்த நிலையில், 16வது ஓவரில் மார்க்ரம் (45 பந்து, 66 ரன்) ஆட்டமிழந்தார்.
அவரைத் தொடர்ந்து, 18வது ஓவரில் படோனி (34 பந்து, 50 ரன்) தேஷ்பாண்டே பந்தில் அவுட்டானார். 20வது ஓவரில், அப்துல் சமத் (10 பந்து, 30 ரன்) 4 சிக்சர்களை விளாசியதால், லக்னோ அணி, 5 விக்கெட் இழப்புக்கு 180 ரன் எடுத்தது. அதையடுத்து, 181 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ராஜஸ்தானின் துவக்க வீரர்கள் யஷஸ்வி ஜெய்ஸ்வால் 74, வைபவ் சூர்யவன்ஷி 34 ரன்கள் குவித்து அவுட் ஆகினர். 20 ஓவர் முடிவில் ராஜஸ்தான் 5 விக்கெட் இழப்புக்கு 178 ரன் எடுத்ததால், லக்னோ 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
The post ராஜஸ்தான் அணிக்கு எதிராக லக்னோ திரில் வெற்றி appeared first on Dinakaran.