கோவை: கோவையில் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்காக பக்தர்களுக்கு மலைப்பாதை திறக்கப்பட்டுள்ளது. கோவையை அடுத்த பூண்டியில்மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் பிரசித்தி பெற்ற வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் உள்ளது. 7-வது மலை உச்சியில் சுயம்பு லிங்கமாக வெள்ளியங்கிரி ஆண்டவர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். ஒவ்வோர் ஆண்டும் மகா சிவராத்திரியை முன்னிட்டு பிப்ரவரி மாதம் முதல் மே மாதம் இறுதி வரை வெள்ளியங்கிரி மலை ஏற பக்தர்களுக்கு வனத்துறை அனுமதி அளித்து வருகிறது
அதன்படி, இன்று வனச்சரகர் சுசீந்திரன் மலைப்பாதையை திறந்து வைத்தார். வெள்ளியங்கிரி மலை மேற்கு தொடர்ச்சி மலையின் வனப்பகுதியில் அமைந்து உள்ளதால், அங்கு யானை, செந்நாய், ஓநாய், புலி, சிறுத்தை, காட்டுப்பன்றி, பாம்பு போன்றவற்றின் நடமாட்டம் உள்ளதாக கூறப்படுகிறது. பகல் நேரங்களில் நிலவும் வெயிலின் தாக்கம் காரணமாக, இரவு நேரங்களில் தான் மக்கள் மலை ஏற தொடங்குகின்றனர்.
மலை ஏற செல்லும் பக்தர்கள் கொண்டு வரும் உடைமைகளை சோதனை செய்த பின்னரே, பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுகின்றனர். இந்த கோயிலுக்கு கோவை மட்டும் இன்றி, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், அண்டை மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.
The post கோவையில் வெள்ளியங்கிரி மலையேற்றத்திற்காக பக்தர்களுக்கு மலைப்பாதை திறப்பு appeared first on Dinakaran.