ஜியோ ஸ்பேஸ் இயக்கம், டெலிவரி ஊழியர்கள் பாதுகாப்பு, ரூ.6 லட்சம் வரை வாடகை வருவாய்க்கு வரியில்லை : ஒன்றிய பட்ஜெட் 2025

2 hours ago 1

டெல்லி : புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது என்று ஒன்றிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. 2025-2026ம் நிதியாண்டிற்கான ஒன்றிய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார்.பீகாரில் இந்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், ஒன்றிய பட்ஜெட்டில் அடுத்தடுத்து அம்மாநிலத்திற்கு அறிவிப்புகள் வெளியாகின.தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம், புதிய விமான நிலையங்கள், தாமரை விதைகளுக்கு புதிய வாரியம் உள்ளிட்ட திட்டங்களை பீகார் மாநிலத்திற்கு அறிவித்தார் நிதியமைச்சர். இதை சுட்டிக்காட்டி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.

ஒன்றிய பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள அறிவிப்புகள் பின்வருமாறு..

*நாட்டின் வளர்ச்சியை அதிகரிக்கவும், மக்களின் வாழ்வாதாரத்தை உயர்க்கும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது.

*வளர்ச்சியடைந்த தேசம் என்ற நிலையை எட்ட தொடர்ந்து நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன. பெரிய பொருளாதார நாடுகளில் விரைவாக வளரும் நாடாக இந்தியா உள்ளது. நடுத்தர குடும்ப நலனுக்கு பட்ஜெட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

*இளைஞர்கள் முன்னேற்றம், விவசாயம், வறுமை ஒழிப்பு, உணவு உத்தரவாதம் உள்ளிட்ட 10 அம்சங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

*வரி விதிப்பு, நகர்ப்புற மேம்பாடு, கனிம வளம், நிதி மேலாண்மை, மின்சாரம், ஒழுங்குமுறை ஆகிய 6 துறைகளில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

*விவசாயிகளுக்கான ‘கிசான் கிரெடிட் கார்டு’ உச்சவரம்பு ரூ. 3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும். கூட்டுறவுத் துறைக்கு கூடுதல் கடன் வசதி அளிக்கப்படும். 7.7 கோடி விவசாயிகளுக்கு கிஷான் கிரடிட் கார்டு வழங்கப்படும்.

*பட்டியலின, பழங்குடியின பெண்கள் 5 லட்சம் பேருக்கு, தலா ரூ. 2 கோடி வரை தொழிற்கடன் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.

*மீன் வளத்தை அதிகரிக்க புதிய திட்டங்களை அறிவித்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

*பீகார் மாநில விவசாயிகள், கூட்டுறவு அமைப்புகள் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது

*அஸ்ஸாமில் யூரியா உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப்படும்.

*இந்திய மின்சார தேவையை சமாளிக்கும் நோக்கில் அணு உலை மூலம் மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டம். 2047-ம் ஆண்டுக்குள் 100 கிகா.வாட் அணுமின் உற்பத்தி செய்ய திட்டம்!

*அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கான திறன்களை மேம்படுத்தும் நோக்கில் 50,000 டிங்கரிங் ஆய்வகங்கள் அமைக்கப்படும்

*இந்தியாவில் 8 கோடி குழந்தைகள் அங்கன்வாடிகள் மூலம் பயன்பெற்று வருகின்றனர். அங்கன்வாடி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து வழங்க நடவடிக்கை.

*தோல்பொருட்கள் உற்பத்தி துறையில் 22 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.

*தோல் மற்றும் காலணி உற்பத்தி தொழிற்சாலைக்கு உற்பத்தி அடிப்படையில் ஊக்கத்தொகை வழங்கப்படும்.

*சிறு முதல் பெரிய தொழில் உற்பத்தியை அதிகரிக்க தேசிய உற்பத்தி இயக்கம் உருவாக்கப்படும்.

*சிறு குறு நிறுவனங்களுக்கு ரூ.20 கோடி கடன் உத்தரவாதம் வழங்கப்படும் எனவும், உலக அளவில் பொம்மை தயாரிப்பு மையமாக இந்தியாவை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

*புதிய வருமான வரி திட்டத்தில் ரூ.12 லட்சம் வரை வருமான வரி கிடையாது. மாதம் ரூ.1 லட்சம் வரை ஊதியம் வாங்குவோர் இனி வரி கட்டத் தேவையில்லை. தனிநபர் வருமான வரிக்கான உச்சவரம்பு ரூ.7 லட்சத்தில் இருந்து ரூ.12 லட்சமாக அதிகரிப்பு.

*அரசின் வரி விலக்கு அறிவிப்பால், ஆண்டுக்கு நேரடி வரி வருவாய் ரூ.1 லட்சம் கோடியும், மறைமுக வரி வருவாய் ரூ. 2,600 கோடியும் அரசுக்கு இழப்பு

*அபராதத்துடன் வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம் 2 ஆண்டுகளிலிருந்து 4 ஆண்டுகளாக உயர்வு

* 2 சொந்த வீடுகளுக்கு வரி சலுகைகள் பெறலாம். வீட்டு வாடகை TDS உச்ச வரம்பு ரூ.2.40 லட்சத்தில் இருந்து ரூ.6 லட்சமாக அதிகரிப்பு

*நேரடி வரி விதிப்புக்காக கொண்டுவரப்படும் மசோதா 50% பழைய சட்டத்தை உள்ளடக்கியிருக்கும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.வருமான வரி பிடித்தத்திற்கான படிநிலைகளில் மாற்றம் கொண்டுவரப்படும்.

*மேலும் வழக்கு தொடர்வதை குறைக்கும் வகையிலும், வருமான வரி செலுத்துவதை எளிமையாக்கும் வகையிலும் புதிய மசோதா இருக்கும் என அறிவிப்பு.

*லித்தியம் பேட்டரிகளுக்கான சுங்கவரி குறைக்கப்படுவதால், மின்சார வாகனங்களுக்கான சுங்க வரி குறையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் டிவி பேனல்களுக்கான சுங்க வரி 20% அதிகரிக்கப்படுவதாக அறிவிப்பு.

*மொத்த உற்பத்தியில் 4.8% பற்றாகுறை உள்ளது. இது அடுத்த ஆண்டு இது 4.4%ஆக குறையும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

*36 உயிர் காக்கும் புற்றுநோய் மருத்துகளுக்கு வரி விலக்கு அளித்தும், 82 மருத்துகளுக்கு செஸ் அல்லது மதிப்பு கூட்டு வரிகளில் ஏதெனினும் ஒன்றுக்கு மட்டும் வசூலிக்கப்படும்.

*காப்பீட்டு துறையில் இதற்கு முன்னர் 74% அந்நிய முதலீடு இருந்த நிலையில், அதை 100% அந்நிய முதலீடாக உயர்த்தி அறிவிப்பு வெளியீடு.

*அணு உலைகள் மூலமாக 2047ஆம் ஆண்டிற்குள் 100 ஜிகாவாட் மின் உற்பத்தி செய்யவும், சிறு மற்றும் நடுத்தர அணு உலைகள் அமைக்க ரூ.20,000 கோடி ஒதுக்கி அறிவிப்பு வெளியீடு

*முதியோருக்கான வட்டி வருவாயில் ரூ.1 லட்சம் வரை வருமான வரி கிடையாது.இதுவரை ₹50,000 வரையே வரி விலக்கு வழங்கப்பட்டு வந்தது.

*சாலையோர வியாபாரிகளுக்கான கடன் உதவி ரூ.30,000 ஆக அதிகரிப்பு

*மாணவர்களுக்கு தாய்மொழியில் டிஜிட்டல் பாடங்கள் வழங்க திட்டம். ஆராய்ச்சி மாணவர்களுக்கு ஊக்கத்தொகை அதிகரிப்பு.

“சுகாதாரம், வேளாண் உள்ளிட்ட 3 துறைகளில், Al மையங்கள் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

*தாமரை விதைகளுக்காக புதிய வாரியம் பிகாரில் அமைக்கப்படும். விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்ப உதவிகள் கொடுக்கப்படும் என்றும், வேளான்மை திட்டங்களை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.

*மேம்படுத்தப்பட்ட உதான் திட்டத்தின்கீழ் 120 புதிய வழிதடங்களில் விமான சேவை அமைக்கப்படும் என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

*பீகாரில் ஏற்கனவே உள்ள விமான நிலையம் விரிவாக்கப்பட்டு, பசுமை விமான நிலையம் அமைக்கப்படும் எனவும் அறிவிப்பு. இதனால் 400 கோடி பயனாளிகள் பயன்பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது.

*பீகாரில் தேசிய உணவு தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை நிறுவனம் அமைக்கப்படும். ஐஐடி பாட்னா உள்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்.

*ஒவ்வொரு வீட்டுக்கும் குடிநீர் குழாய் என்ற திட்டத்தில் 100% இலக்கை அடைய, ஜல் ஜீவன் திட்டம் 2028ம் ஆண்டு வரை நீட்டிப்பு

*உள்கட்டமைப்பு முதலீடுகளுக்காக ரூ. 1.5 லட்சம் கோடி, மாநிலங்களுக்கு வட்டியில்லாத கடன் வழங்கப்படும்

*ஆன்லைன் தொழில் சார்ந்த ஊழியர்களுக்கு புதிய காப்பீட்டு திட்டம் கொண்டுவரப்படும். டெலிவரி ஊழியர்கள் தங்கள் விவரங்களை பதிவு செய்ய தனி இணையதளம் உருவாக்கப்படும்.

*மாநில அரசின் பங்களிப்புடன் சுற்றுலா தளங்கள் மேம்படுத்தப்படும். தனியார் பங்களிப்புடன் மருத்துவ சுற்றுலா மேம்படுத்தப்படும்.

*கடந்த 10 ஆண்டுகளில் ஐஐடியில் 100% மாணவர் சேர்க்கை அதிகரிப்பு எனவும், 23 ஐஐடிகள் மேம்படுத்தப்படும் என்றும் அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

*மேலும் அடுத்த ஆண்டு மருத்துவ கல்லூரிகளில் 10,000 புதிய இடங்கள் ஏற்படுத்தப்படும் என்றும், அடுத்த 5 ஆண்டுகளில் 75,000 மருத்துவ இடங்கள் சேர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

*அடுத்த 3 ஆண்டுகளில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளிலும், புற்றுநோய் மையங்கள் ஏற்படுத்தப்படும் எனவும் அறிவிப்பு

*வரி செலுத்துபவர்களுக்கு பல்வேறு வசதிகளை கடந்த 10 ஆண்டுகளாக நம் அரசு செய்து வருகிறது. புதிய வருமான் வரி திட்டம் மசோதா அடுத்த வாரம் தாக்கல் செய்யப்படும்.

*இந்திய அஞ்சல்துறை, மிகப்பெரிய அளவிலான லாஜிஸ்டிக் மையமாக மாற்றப்படும். கிராமப்புறங்களில் 1.5 லட்சம் தபால் நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.

*ஆறாண்டுத் திட்டத்தின் கீழ் துவரை, உளுந்து, மைசூரு பருப்புகளின் உற்பத்திற்கு முக்கியத்துவம்.

*தனம், தானிய கிஷான் யோஜனா திட்டம் மாநில அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும். இந்த திட்டத்தில் உற்பத்தி குறைவாக உள்ள 100 மாவட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

*விண்வெளித்துறை வளர்ச்சிக்காக தேசிய அளவில் ‘ஜியோ ஸ்பேஸ் இயக்கம்’ உருவாக்கப்படும்

The post ஜியோ ஸ்பேஸ் இயக்கம், டெலிவரி ஊழியர்கள் பாதுகாப்பு, ரூ.6 லட்சம் வரை வாடகை வருவாய்க்கு வரியில்லை : ஒன்றிய பட்ஜெட் 2025 appeared first on Dinakaran.

Read Entire Article