கோவை: கோவையில் தொடரும் மழையால், மாவட்டத்தில் உள்ள குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.
கோவை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால், மாவட்டத்தில் உள்ள குளம், குட்டைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. கோவை மாவட்டத்தில் 25-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இதில், மாநகராட்சிப் பகுதியில் வாலாங்குளம், உக்கடம் பெரியகுளம், முத்தண்ணன் குளம், குறிச்சிக்குளம், சிங்காநல்லூர் குளம், செல்வசிந்தாமணி குளம் உள்ளிட்ட 9 குளங்கள் உள்ளன. மீதமுள்ள குளங்கள் புறநகரப் பகுதியில் உள்ளன. நொய்யல் ஆற்றின் வழியோரம் உள்ள உக்குளம், பேரூர் பெரியகுளம், சொட்டையாண்டி குட்டை, கங்க நாராயண சமுத்திரம் உள்ளிட்ட குளங்களுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்படுகிறது. மாநகரில் உள்ள பெரும்பாலான குளங்கள் நிரம்பி உபரி நீர் கால்வாய்களில் வழிந்தோடி வருகிறது.