
சென்னை,
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை அண்மையில் தொடங்கினார். இதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 27-ந்தேதி பிரமாண்டமாக நடந்தது. இந்த மாநாட்டில் லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்றனர்.
மாநாட்டில் விஜய்யின் பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. மாநாட்டை தொடர்ந்து 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப அரசியல் வியூகங்களை விஜய் அமைத்து வருகிறார். மேலும் தமிழகம் முழுவதும் கட்சிக்கு மாவட்ட செயலாளர்கள், புதிய நிர்வாகிகளை விஜய் நியமித்து வருகிறார்.
இந்த நிலையில், கோவையில் இம்மாதம் இறுதியில் தமிழக வெற்றிக் கழக பூத் கமிட்டி மாநாடு நடத்த திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சரவணம்பட்டி பகுதியில் அமைந்துள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. சென்னை, விழுப்புரம் தொடர்ந்து கோவையிலும் பிரமாண்ட கூட்டத்தை நடத்த தவெகவினர் திட்டமிட்டுள்ளனர்.
கோவையில் கடந்த சனிக்கிழமை தவெக பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.