
திருவள்ளூர்,
ஆன்லைன் என்று சொல்லப்படும் இணையதளத்தை பயன்படுத்துவது இன்று அத்தியாவசியமாக மாறிவிட்டது. அதில் பல நன்மைகள் இருந்தாலும், தீமைகளும் இருக்கத்தான் செய்கின்றன. நன்மைகளை மட்டும் ஏற்றுக்கொண்டு செயல்படுபவர்கள் புத்திசாலிகள் ஆகிவிடுகிறார்கள். அதன் தீங்கு வலைகளில் சிக்கி விடுபவர்கள் உயிர்களை இழந்து போகிறார்கள்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகள் இப்போது உயிரை விழுங்கும் விளையாட்டாக விஸ்வரூபம் எடுத்து இருக்கிறது. வயது வித்தியாசம் பார்க்காமல், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து தரப்பினரும் இதில் அடிமையாகி கிடக்கின்றனர்.
இந்த வகையான சூதாட்டத்தில் பணத்தை இழக்கும் நபர், அடுத்து வாழ்வில் என்ன செய்வது? என்று தெரியாமல், பயத்தில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் சமீபகாலங்களாக அதிகரித்து வருகின்றன.
இதன் அடிப்படையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியை சேர்ந்த முருகன் என்பவர் தனியார் வங்கியின் ஏடிஎம்களில் பணம் நிரப்பும் பணி செய்து வந்தார். இந்த நிலையில் இவர் ஆன்லைன் ரம்மியில் ரூ.6 லட்சத்தை இழந்துள்ளார். இதனால் விரக்தியில் இருந்த முருகன் தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.