சென்னை: ஈஷா யோகா மையத்தில் மகா சிவராத்திரி நிகழ்ச்சிகள் விதிகளுக்கு முரணாக நடத்தப்படுவதாக தொடரப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவையில் ஈஷா யோகா மையம் நடத்தவுள்ள மகாசிவராத்திரி நிகழ்ச்சி அனுமதி வழங்க எதிர்ப்பு தெரிவித்து கோவையை சேர்ந்த சிவஞானன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் தாக்கல் செய்த மனுவில், வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஆண்டுதோறும் மகாசிவராத்திரி நாளில், ஈஷா யோகா மையம் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நாளில், ஒரே நேரத்தில் லட்ச கணக்கான மக்கள் ஈஷா யோகா மையத்தில் கூடுகின்றனர். ஈஷா யோகா மையம் நடத்தும் சிவராத்திரி நிகழ்ச்சியால் வெள்ளியங்கிரி வனச்சூழல் மிகுந்த பாதிக்குள்ளாகிறது. கடந்த காலங்களில் ஈஷா யோகா மையம் நடத்திய சிவராத்திரி நிகழ்ச்சியில் 7 லட்சம் பேர் ஒரே நேரத்தில் கூடியதால் ஏற்பட்ட கழிவு நீர் வனப்பகுதிகளை மட்டுமல்லாமல் அருகில் உள்ள விவசாய நிலங்களையும் மாசுபடுத்தியது. அதே போல், அரசு நிர்ணயித்துள்ள ஒலி அளவான 45 டெசிபல் ஒலி அளவை விட அதிமான அளவில் பயன்படுத்தப்பட்டது.
எனவே, ஈஷாவில் முறையான கழிவு நீர் சுத்திகரிப்பு வசதிகள் ஏற்படுத்துமாறும், விதிகளை மீறி வனசூழலை பாதிக்கும் வகையில் ஒலி, ஒளி மாசு ஏற்படுத்தும் ஈஷா யோகா மைய சிவராத்திரி நிகழ்ச்சியை நடத்த அனுமதிக்க கூடாது என்றும் உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் சார்பில் கூடுதல் அட்வகேட் ஜெனரல் ஜெ.ரவீந்திரன் ஆய்வு அறிக்கை தாக்கல் செய்தார். அதில், உரிய விதிகளுக்கு உட்பட்டே நிகழ்ச்சி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை எனக் கூறி மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
The post கோவையில் ஈஷா யோகா மையம் நடத்தும் மகா சிவராத்திரி நிகழ்ச்சிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.