நன்றி குங்குமம் தோழி
வளரும் தமிழக டென்னிஸ் நட்சத்திரம் மாயா ராஜேஷ்வரன் ரேவதிக்கு வயது 15தான் ஆகிறது. ஸ்பெயினின் மல்லோர்காவில் உள்ள புகழ்பெற்ற ‘ரஃபேல் நடால் அகாடமி’யில், இவர் ஒரு ஆண்டுகால பயிற்சியைத் தொடர ஐரோப்பாவுக்குச் சென்றுள்ளதால், இந்திய டென்னிஸின் எதிர்காலத்திற்கான மற்றொரு சானியா மிர்ஸாவாக உருவாக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகின் மிகச்சிறந்த டென்னிஸ் ஆட்டத்தில் உயரடுக்கு பயிற்சிகள் பெறும் வாய்ப்பை மாயா பெற்றுள்ளார்.
சமீபத்தில் ஓய்வு பெற்ற டென்னிஸ் ஜாம்பவான் ரஃபேல் நடாலின் அகாடமி, மல்லோர்கா தீவில் செயல்படுகிறது. ரஃபேல் நடாலின் வீடும் அங்குதான் உள்ளது. மிகத் திறமையானவர்கள் மட்டுமே ரஃபேல் நடாலின் பயிற்சி நிலையத்தில் பட்டை தீட்டப்பட சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். கோவையைச் சேர்ந்த மாயா, ரஃபேல் நடாலின் பயிற்சி நிலையத்தில் ஓராண்டு காலப் பயிற்சியைத் தொடங்கியுள்ளார். தனது விளையாட்டை மேலும் செம்மைப்படுத்த மாயா கடந்த 2024ம் ஆண்டு மல்லோர்காவில் உள்ள ரஃபேல் நடால் டென்னிஸ் அகாடமியில் ஒரு வாரம் பயிற்சி பெற்றார். அங்கு அவரது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதால், ஒரு வருட பயிற்சி ஒப்பந்தத்தைப் பெறும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
கடந்த 5 வருடங்களாக மாயாவின் பயிற்சியாளர் மனோஜ்குமார் இது குறித்து பேசிய போது, ‘‘மாயா 8 வயதில் டென்னிஸ் ஆடத் தொடங்கினார். படித்துக் கொண்டிருந்ததால், பள்ளி நேரத்திற்குப் பிறகு டென்னிஸ் ஆட்டத்தில் அவரால் சரிவர கவனம் செலுத்த முடியவில்லை. கோயம்புத்தூரில் மாயா வீட்டைச் சுற்றி பல டென்னிஸ் பயிற்சி நிலையங்கள் இருந்தன. மாயா தனது பத்தாவது வயதில், தொழில்முறை டென்னிஸ் விளையாட முடிவு செய்தார். அதன் பிறகு தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டவர் தன் 14வது வயதில் சென்னை மற்றும் ஹைதராபாத்தில் நடைபெற்ற டென்னிஸ் போட்டியில் வெற்றிபெற்றார்.
அது அவருக்கு ஊக்கம் தர உயர்தர பயிற்சியில் ஈடுபட விரும்பினார். அதற்கு ஐரோப்பா சிறந்த இடம் என்பதால், அவர் அங்கு சென்று பயிற்சி பெற விரும்பினோம். அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது போல் ரஃபேல் நடால் அகாடமியில் பல சுற்றுக்கு பிறகு ஒரு வருட பயிற்சிக்கு தேர்வானார். ஓராண்டு பயிற்சியில் இவரின் வளர்ச்சி எந்த தரத்தில் உள்ளது என்பதன் அடிப்படையில் சீனியர் டென்னிஸ் பிரிவு போட்டிகளில் பங்கெடுக்கலாம். தற்போது இந்தியாவில் ஜூனியர் டென்னிஸில் முதல் தரவரிசையை பெற்றிருக்கும் இவர் சீனியர் போட்டிகளில் சிறப்பாக செயல்படுவதில் அதிக கவனம் தேவை.
அந்தாண்டு பிப்ரவரி மாதம் மும்பை ஓபன் 2025 WTA125 போட்டியில் தன் முழு திறமையையும் வெளிப்படுத்தினார். வயதைத் தாண்டிய திறமையை மாயாவின் விளையாட்டில் காண முடிந்தது. இவர் டென்னிஸ் உலகின் தரவரிசையில் 264 வது இடத்தில் உள்ள இத்தாலியின் நிக்கோல் ஃபோசா ஹுர்கோவை கடுமையாகப் போராடி வெற்றி பெற்றார். 434வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் ஜெசிகா ஃபைலாவையும் வீழ்த்தினார். இந்த வெற்றிகளின் மூலம், WTA புள்ளியைப் பெற்ற இளம் இந்திய வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
2022ம் ஆண்டு முதல், ஜூனியர் போட்டிகளில் விளையாடி வரும் மாயா, 2023ல் ஐந்து ஜூனியர் பட்டங்களை வென்றுள்ளார். அதே ஆண்டு ஆஸ்திரேலிய ஓபன் போட்டியில் 14 வயதுக்குட்பட்ட போட்டியிலும் கலந்து கொண்டார்.2025ம் ஆண்டு டெல்லியில் J300 ஜூனியர் பட்டத்தை வென்றார் மற்றும் ஜூனியர் ITF தரவரிசையில் முதல் 60 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். இது 2025 ஜூனியர் கிராண்ட்ஸ்லாம் போட்டிகளிலும் அவருக்கு ஒரு இடத்தைப் பிடித்து தந்துள்ளது.
தொகுப்பு: கண்ணம்மா பாரதி
The post கோவையிலிருந்து ஒரு சானியா மிர்ஸா! appeared first on Dinakaran.