
கோவையில் ஏராளமான கல்லூரிகள் உள்ளன. கல்லூரி செல்ல வீடு எடுத்து தங்கியிருக்கும் மாணவர்களை குறிவைத்து கஞ்சா, போதை மாத்திரைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதனை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் குனியமுத்தூர் போலீசார் கல்லூரி மாணவர்கள் தங்கி இருந்த தனியார் தங்கும் விடுதிகள், வீடுகளில் திடீர் சோதனை நடத்தினர்.
அப்போது ஒரு மாடியில் கஞ்சா செடிகளை மாணவர்கள் வளர்த்து வந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். 22 கஞ்சா செடிகளை பறிமுதல் செய்து, கஞ்சா செடியை வளர்த்து வந்த கல்லூரி மாணவர்களான அரியலூரை சேர்ந்த கலைவாணன் (21 வயது), கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்த விஷ்ணு (19 வயது), தனுஷ் (19 வயது), அபினவ் (19 வயது), அனுருத் (19 வயது) ஆகிய 5 பேரை கைது செய்தனர். இவர்கள் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. கோவையில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா செடி வளர்த்து கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.