கோவை : கோவை மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு மேற்கொள்வது தொடர்பாக தொழில்துறையினருடன் கலந்தாலோசனை கூட்டம் ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி கலையரங்கில் நேற்று நடந்தது. மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மாவட்ட கலெக்டர் பவன்குமார் இக்கூட்டத்தை துவக்கி வைத்து பேசியதாவது:
தமிழ்நாடு முதல்வர் வழிகாட்டுதலின்படி, கோவை மாவட்டத்திற்கு உட்பட்ட மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராம ஊராட்சி பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டத்தினை உயர்த்தும் வகையில் மழைநீர் சேகரிப்பதன் அவசியம் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் கோவை மாவட்டத்தில் உள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்பு மற்றும் கூரைமேல் மழைநீர் சேகரிப்பு அமைப்பு கட்டமைப்புகளை உருவாக்கும் வகையில் இந்த கலந்தாலோசனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாவட்ட காலநிலை மாற்றம் நமக்கு நன்மையாக அமைந்தாலும், கோவை மாவட்டத்தில் நொய்யல் ஆறு மற்றும் சிறுவாணி ஆறு போன்றவைகள் நமக்கு முக்கிய நீராதாரமாக விளங்குகின்றது. கோவை மாவட்டத்தின் மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஏற்றாற்போல், மழைநீரை முழுமையாக சேமிக்கின்ற வகையில் பொதுமக்கள் அனைவருக்கும் மழைநீரை சேமிப்பதற்கான விழிப்புணர்வு ஏற்படுத்தி, வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளில் அமைந்துள்ள பழுதடைந்த மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீர் செய்ய வேண்டியுள்ளது. இதன்மூலம், மழைநீரை முழுமையாக சேமிக்கவேண்டும்.
மழைநீர் சேகரிப்பதற்கான முயற்சிகள் சரிவர இல்லாமல் இருப்பதால், காலநிலை மாற்றத்தினால் மழைக்காலங்களில், மழை நீரானது சாலைகளில் தேங்குகிறது. இது, யாருக்கும் பயன்படுவது இல்லை.
எனவே, தொழில் நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளை சீர்செய்து மழைநீரை முழுமையாக சேமிக்க வேண்டும். மேலும், கட்டமைப்புகளை அடிக்கடி சரிபார்த்து மழைநீரை சேகரிப்பதால், மழைநீரை நிலத்தடிக்கு செலுத்தி பூமியின் நீர்மட்டம் உயர ஏதுவாக அமையும். எனவே, நாம் அனைவரும் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தும் வகையில் மழைநீர் சேகரிக்கும் இந்த சிறப்பான திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பேசினார். இக்கூட்டத்தில், மாநகராட்சி துணை கமிஷனர் குமரேசன், மாநகர தலைமை பொறியாளர் விஜயகுமார், மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் சண்முகசிவா மற்றும் பல்வேறு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்அமைப்பின் பிரதிநிதிகள், குறுந்தொழில் முனைவோர் திரளாக பங்கேற்றனர்.
The post கோவை மாவட்டத்தில் குறுந்தொழில் நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு ஏற்படுத்த உத்தரவு appeared first on Dinakaran.