
தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் பேசிய, சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர்.ஜெயராமன், கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளிலும் சீரான குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதற்கு பதில் அளித்த நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, "நேற்று மற்றும் இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் குடிநீர் வரவில்லை என்று கூறினார்கள். இது தொடர்பாக மாநகர ஆணையரை அனுப்பி விரிவாக ஆய்வு செய்யப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சியில் 7 நகராட்சி, 33 பேரூராட்சிகள் உள்ளது. 22 லட்சம் பேர் மக்கள் உள்ளனர். சிறுவானி, பிள்ளூர் ஆகிய 6 திட்டப்பணிகள் மூலம் 325 எம்எல்டி தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதன் மூலம், நபருக்கு 142 லிட்டர் குடிநீர் வழங்கப்பட உள்ளது. அனைத்து வார்டுகளிலும் சீரான குடிநீர் வழங்க ஆணையருக்கு அறிவுறுத்தி உள்ளேன்.
பிள்ளூர் கூட்டுகுடிநீர் திட்டம் பைப்லைன் போடுவதற்கு தடைஆணை பெறப்பட்டதால் 2 ஆண்டுகள் தடைபட்டது. பின் பணிகள் முடிக்கப்பட்டது. நீங்கள் ஆரம்பித்தீர்கள், நாங்கள் முடித்துள்ளோம்" என்று தெரிவித்தார்.