கோவை
கோவை துடியலூர் அருகே தாளியூர் பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருபவர் நடராஜ். இவர் அதிகாலை தடாகம் சாலையில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இன்று வழக்கம் போல அதிகாலை 5.40 மணி அளவில் நடராஜ் நடைபயிற்சி சென்றார். அப்போது வனப்பகுதியில் இருந்து உணவு தேடி டாகம் சாலைக்கு வந்த காட்டு யானை, நடைபயிற்சி சென்று கொண்டிருந்த நடராஜன் தந்ததால் குத்தி துதிக்கையால் தூக்கி வீசி உள்ளது.
இதில் நடராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காட்டு யானைகள் ஊருக்குள் வராமல் தடுக்கக்கோரி பொதுமக்கள் மற்றும் விவசாய சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
பிறகு, அங்கு வந்த தடாகம் காவல்துறையினர் மற்றும் வனத்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதேபோல, அங்கு வந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் பி.ஆர்.ஜி அருண்குமார், நடராஜ் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியதோடு, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்த பிறகு, போராட்டம் கைவிடப்பட்டது. இதனால், அங்கு சுமார் 2 மணி நேரமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.