கோவில்பட்டியில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல்

2 hours ago 3

கோவில்பட்டி : தமிழர்களின் பாரம்பரிய திருநாளான பொங்கல் பண்டிகை திருநாள் நாளை கொண்டாடப்படுவதை முன்னிட்டு கோவில்பட்டி நகரில் கரும்பு, மஞ்சள் குலை மற்றும் பனங்கிழங்கு, காய்கறிகள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.தமிழர்களின் திருநாளான தைப்பொங்கல் திருநாளில் காலை வேளையில் மக்கள் தங்களது வீடுகள் முன்பு வண்ண கோலமிட்டு, பொங்கல் பானை வைத்து சர்க்கரை பொங்கலிட்டு சூரியபகவானை வழிபடுவது வழக்கமாகும்.

பொங்கலிட்டவுடன் பொங்கல் பானையை தீபமேற்றிய குத்துவிளக்கு முன்பு வைத்து, அதன் இருபுறமும் கரும்புகளை தோரணமாக வைத்து தமிழக மக்கள் வழிபட்டு வருகின்றனர். கிராமங்களில் இந்த பொங்கல் பண்டிகையானது வெகு சிறப்பாக கொண்டாடப்படுகிறது. விவசாயிகள் தங்களது விளைநிலங்களில் விளைந்த நவதானிங்கள், காய்கறிகளை வைத்து பொங்கலிட்டு வழிபாடு நடத்துவார்கள்.

இந்நிலையில் இந்தாண்டு பொங்கல் திருநாள் நாளை (14ம்தேதி) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்பட்டி நகரில் கரும்பு கட்டுகள் விற்பனை துவங்கியுள்ளது. மதுரை, மேலூர் பகுதியில் இருந்து கரும்பு கட்டுகளை மொத்தமாக கொள்முதல் செய்து, அங்கிருந்து லாரிகள் மூலம் கோவில்பட்டிக்கு கொண்டு வந்து வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். இதற்காக கோவில்பட்டி நகரில் மெயின்ரோடு, மார்க்கெட் ரோடு, எட்டயபுரம் ரோடு, புதுரோடு, கிருஷ்ணகோவில் தெரு, கடலையூர் ரோடு, பசுவந்தனை ரோடு, புதுக்கிராமம் போன்ற பல்வேறு இடங்களில் மரத்தடிகளால் அமைக்கப்பட்டுள்ள சாரங்களில் கரும்பு கட்டுகளை வைத்து விற்பனை செய்து வருகின்றனர்.

15 எண்ணம் கொண்ட ஒரு கரும்பு கட்டு ₹450 முதல் ₹500 வரை வியாபாரிகள் விற்கின்றனர். சுற்று வட்டார கிராமங்களில் இருந்து பொதுமக்கள் மற்றும் சிறு வியாபாரிகள் கரும்பு கட்டுகளை வாங்கி வேன் மற்றும் ஆட்டோக்கள் மூலம் எடுத்து செல்கின்றனர். இதேபோல் 10 எண்ணம் கொண்ட ஒரு கட்டு பனங்கிழங்கு ₹50 முதல் ₹60 வரை விற்கப்படுகிறது. மஞ்சள்கிழங்கு குலைகள் தரம் வாரியாக ₹30, ₹40, ₹50க்கும் விற்கப்படுகிறது.

மேலும் காய்கறிகள், வாழைத்தார்கள், வாழைஇலை கட்டுகள், பூமாலைகள், மங்கள பொருட்கள், பொங்கல் வைப்பதற்கு தேவையான பருத்திமார் கட்டுகள், பொங்கல் வைக்கும் அடுப்புகளில் வெள்ளையடிப்பதற்கான சுண்ணாம்பு, கலர் கோலப்பொடிகளின் விற்பனையும் களை கட்டியது. மேலும் பொங்கல் பானை மற்றும் ஜவுளி கடைகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டது. இப்பொருட்களை வாங்குவதற்கு கோவில்பட்டி நகரம் மட்டுமின்றி சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் பஜார் மற்றும் மார்க்கெட் ரோட்டிற்கு சென்றனர். இதனால் அப்பகுதிகளில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. இதையொட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post கோவில்பட்டியில் பொங்கல் பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதல் appeared first on Dinakaran.

Read Entire Article