
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாவட்டம் கடம்பூர் பகுதியில் பெட்ரோல் பங்க் செயல்பட்டு வருகிறது. இந்த பெட்ரோல் பங்கில் கயத்தார் அருகே உள்ள காப்புலிங்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த செல்லையா என்பவரின் மகன் சங்கிலி பாண்டி (வயது 29) வேலை செய்து வந்தார். பெட்ரோல் பங்க்கின் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இன்று வழக்கம் போல் அவர் காலையில் பணிக்கு சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரம் ஆகியும் அவர் பெட்ரோல் பங்கிற்கு வரவில்லை. இது தொடர்பாக செல்போனில் முயற்சி செய்த போதும் அவர் போன் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் நண்பர்கள் சிலருக்கு போன் செய்து விசாரித்து பார்த்துள்ளனர். இதற்கிடையே கடம்பூர் சாலையில் யாரோ மர்ம நபர்கள் அவரை வெட்டி படுகொலை செய்த சம்பவம் தெரியவந்தது.
இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், அங்கு சென்று விசாரித்ததில் ரத்தக்கறையுடன் உயிரிழந்த நிலையில் சங்கிலி பாண்டி சடலமாக கிடந்துள்ளார். அருகில் ஒரு காரும், அவரது மோட்டார் சைக்கிளும் அங்கு இருந்தன. சம்பவம் தொடர்பாக போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தினர். இதில் வீட்டில் இருந்து பெட்ரொல் பங்கிற்கு கிளம்பிய சங்கிலி பாண்டியன் கடம்பூர் சாலையில் வந்து கொண்டிருந்தபோது அப்போது எதிரே வந்த கார் ஒன்று வேண்டுமென்றே அவர் மீது மோதியுள்ளதாக கூறப்படுகிறது.
இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட சங்கிலி பாண்டியன், அந்த காரில் இருந்த நபர்கள் இறங்கி வந்து அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டி படுகொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி சென்றது தெரியவந்தது. இதையடுத்து சங்கிலி பாண்டியன் உடலை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு கயத்தாறு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் எதற்காக இந்த கொலை நடந்தது என்பது குறித்தும் போலீசார் விசாரணையை நடத்தி வருகின்றனர். மேலும் சங்கிலி பாண்டி வெட்டிப் படுகொலை செய்து தப்பியோடிய கும்பலை கயத்தாறு போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.