பனாஜி: கோவாவில் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் பலியானார்கள். மேலும் 70க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோவாவின் ஷிர்கோ கிராமத்தில் உள்ள லைராய் தேவி கோயிலில் நேற்று திருவிழா நடைபெற்றது. இந்த திருவிழாவை பார்ப்பதற்காக சுமார் 30ஆயிரம் பேர் முதல் 40ஆயிரம் பேர் வரை திரண்டு இருந்தனர். குறுகிய பாதை வழியாக கூட்டம் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதன் காரணமாக ஒருவர் மீது ஒருவர் விழுந்தனர். அவர்களை தாண்டி பலர் செல்ல முயன்றனர். கூட்ட நெரிசலில் சிக்கி இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் உயிரிழந்தனர். மேலும் 70 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பாதிக்கப்பட்டவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து முதல்வர் பிரமோத் சாவந்த் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
5 மூத்த அதிகாரிகளை உடனடியாக பணியிட மாறுதல் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. நியாயமான மற்றும் நேர்மையான விசாரணையை நடத்தும் வகையில் வடக்கு கோவா மாவட்ட ஆட்சியர் சினேகா, எஸ்பி அக்ஷத் கவுசல், பிச்சோலிம் துணை எஸ்பி ஜிவ்பா தல்வி, துணை ஆட்சியர் பீம்நாத் மற்றும் காவல் ஆய்வாளர் தினேஷ் கடேகர் உள்ளிட்டோர் பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ளனர்” என்றார். பக்தர்கள் பலியானதற்கு ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.
The post கோவா கோயில் திருவிழாவில் கூட்ட நெரிசல்; 6 பேர் பலி, 70 பேர் காயம் appeared first on Dinakaran.