கோலகலமாக நடைபெற்று வந்த மதுரை பாலமேடு ஜல்லிகட்டு போட்டி நிறைவு!..

2 hours ago 4

அலங்காநல்லூர்: கோலகலமாக நடைபெற்று வந்த மதுரை பாலமேடு ஜல்லிகட்டு போட்டி நிறைவு பெற்றது. மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 930 காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 450 வீரர்கள் பங்கேற்றனர். அந்த காளைகளை அடக்குவதற்காக காளையர்கள் மல்லுக்கட்டினர். நாளை அலங்காநல்லூரில் நடைபெற உள்ள ஏறுதழுவதல் விழாவை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் துவக்கிவைத்தார். தைப்பொங்கல் திருநாளை முன்னிட்டு தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு திருவிழா மதுரை மாவட்டம், அவனியாபுரத்தில் நேற்று நடைபெற்றது. இன்று மாட்டுப்பொங்கலையொட்டி பாலமேட்டில் உள்ள மஞ்சமலை ஆற்று திடலில் இன்று காலை ஜல்லிக்கட்டு தொடங்கியது.

இதில் பங்கேற்க ஆன்லைன் மூலம் 1,100 காளைகள், 910 வீரர்கள் முன்பதிவு செய்திருந்தனர். முன்னதாக காளைகளுக்கும், வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை நடந்தது. பின்னர், கிராமத்தில் உள்ள பாதாள விநாயகர் கோயிலில் சிறப்பு வழிபாடு செய்யப்பட்டது. பின்னர் பாரம்பரிய முறைப்படி வெற்றி பெற்ற வீரர்களுக்கும், காளைகளுக்கும் வழங்கும் வேட்டி, துண்டு உள்ளிட்ட பரிசுப் பொருள்களை தலைச்சுமையாக, வாண வேடிக்கையுடன், மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்தனர்.

இதை தொடர்ந்து வாடிவாசல் முன்பாக அமைச்சர் பி.மூர்த்தி, கலெக்டர் சங்கீதா சோழவந்தான் எம்.எல்.ஏ வெங்கடேசன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த், கோட்டாட்சியர் ஆகியோர் முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் பாதுகாப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். காலை 7.40 மணி அளவில் ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் பி.மூர்த்தி தொடங்கி வைத்தார். முதலாவதாக வாடிவாசலில் இருந்து கோயில் காளை அவிழ்த்து விடப்பட்டது.

பின்னர் ஒவ்வொன்றாக காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. வாடிவாசலில் இருந்து சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் தீரத்துடன் அடக்கினர். தொட்டால் சீறுவேன் என சில காளைகள் களத்தில் நின்று ஆட்டம் காண்பித்தன. சுற்றுக்கு 100 காளைகள், 50 வீரர்கள் வீதம் களம் இறக்கப்பட்டனர்.

8 சுற்றுகளில் சிறந்த மாடுபிடி வீரர்களாக தேர்வான 32 பேர் இறுதிச்சுற்றில் களமிறங்கினர். மதுரை பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் 14 காளைகளை அடக்கி நத்தம் பார்த்திபன் முதலிடம் பிடித்தார். மஞ்சம்பட்டி துளசிராம் 12 காளைகளை பிடித்து 2ஆம் இடம் பிடித்தார். பொதும்பு பிரபாகரன் 11 காளைகளை அடக்கி 3வது இடம் பிடித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியில் மாடுபிடி வீரர்கள்-19 பேர், மாட்டின் உரிமையாளர்கள்-10 பேர், பார்வையாளர்கள்-9 பேர் உள்பட 38 பேர் காயமடைந்தனர். காயமடைந்த 38 பேரில் 4 பேர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

அதிக காளைகளை அடக்கிய வீரருக்கும், சிறந்த காளையின் உரிமையாளருக்கும் தலா ஒரு டிராக்டர் பரிசு வழங்கப்பட உள்ளன. மேலும், டூவீலர் பசுவும், கன்றும் பரிசாக வழங்கப்பட உள்ளன. இரண்டாவது பரிசு பெற்ற காளைக்கும், வீரருக்கும் டூவீலர் உள்ளிட்ட பரிசுகள் வழங்கப்பட உள்ளன.

The post கோலகலமாக நடைபெற்று வந்த மதுரை பாலமேடு ஜல்லிகட்டு போட்டி நிறைவு!.. appeared first on Dinakaran.

Read Entire Article