சென்னை: பல்வேறு கோரிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுப்பது குறித்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் கோட்டையில் நேற்று பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடி ஏற்ப்படாததால் மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சங்கங்களை இணைத்து ஜாக்டோ-ஜியோ அமைப்பு உருவாக்கப்பட்டு பலவேறு கோரிக்கைகளை முன்வைத்து போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
அதில் முக்கியமாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், நிறுத்திவைக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு பலன்களை வழங்க வேண்டும், அவுட்சோர்சிங் ஒப்பந்த முறையில் ஊழியர்கள் நியமிக்கப்படுவதை ரத்து செய்ய வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு உள்பட 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து வட்ட தலைநகரங்களில் ஜாக்டோ – ஜியோ போராட்டங்களை நடத்தியது. மேலும், வரும் 25ம் தேதி (இன்று) தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றும் ஜாக்டோ-ஜியோ தரப்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள், ஆசிரியர் சங்கங்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அவற்றின் மீது உரிய முடிவு காண, அமைச்சர்கள் அடங்கிய ஒரு குழுவை அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார். அதனடிப்படையில், நேற்றைய தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கள் கவிஞர் மாளிகையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மனித வள மேம்பாட்டு அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் அடங்கிய குழுவினர், கோரிக்கைகள் குறித்து சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
சுமார் 3 மணிநேரமாக நடைபெற்று இந்த பேச்சுவார்த்தையில் ஜாக்டோ ஜியோ உள்ளிட்ட 20 சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டு தங்களின் தரப்பு கோரிக்கைகளை முன்வைத்தனர். இந்த பேச்சு வார்த்தை மதியம் 2 மணியளவில் முடிவுக்கு வந்தது. ஆனால், சங்கங்களின் கோரிக்கையை பெற்றுக் கொண்ட பேச்சுவார்த்தை குழுவினர் முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தனர். இதனையடுத்து நேற்று மாலை அமைச்சர்கள் குழு முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் தெரிவித்த கோரிக்கைகள் நடத்திய பேச்சுவார்த்தையின் முழு விவரங்களையும் விளக்கமாக தெரிவித்தனர்.
இந்நிலையில், நேற்று மாலையில் ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் முதல்வருக்கு ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அந்த அறிக்கையில் ‘அனைத்து ஒருங்கிணைப்பாளர்களும் கையெழுத்திட்டு இருந்தனர். அதில், இப்போதும் எங்களை நேரில் அழைத்து எங்களின் கோரிக்கைகளில் முக்கியமான பழைய ஓய்வு ஊதியம், சரண்விடுப்பு, கால முறை ஊதியம் உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளையாவது நிறைவேற்றுவீர்கள் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே முதல்வர் எங்களின் நியாயமான கோரிக்கைகளை, தேர்தல் காலத்தில் நிறைவேற்றுவதாக தாங்கள் அறிவித்த கோரிக்கைகளை பரிசீலித்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.
இயலாத பட்சத்தில் நாங்கள் போராட்டங்களை முன்னெடுத்து செல்வதை தவிர்க்க இயலாத நிலையில் உள்ளோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம் என்று அறிக்கையில் கூறியிருந்தனர். இந்நிலையில் தலைமை செயலத்தில் 4 அமைச்சர்கள் கொண்ட குழு முதல்வரை 45 நிமிடத்திற்கும் மேலாக சந்தித்து பேசினர். அதன் பின்னர் ஜாக்டோ ஜியோ அமைப்பினரை 4 பேர் கொண்ட அமைச்சர்கள் கொண்ட குழு சந்தித்து பேசினர். அப்போது உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. இதையடுத்து திட்டமிட்டபடி இன்று மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
The post கோரிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்க அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுடன் அமைச்சர்கள் குழு பேச்சு: மாவட்ட தலைநகரங்களில் இன்று ஆர்ப்பாட்டம் என ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு appeared first on Dinakaran.