கோரம் இல்லாததால் திசையன்விளை பேரூராட்சி அதிமுக தலைவி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டம் ரத்து

1 month ago 8

*செயல் அலுவலர் அறிவிப்பு

திசையன்விளை : திசையன்விளை பேரூராட்சியில் அதிமுக தலைவி மீது நேற்று நடைபெறுவதாக இருந்த நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டம் போதிய கோரம் இல்லாததால் நடைபெறவில்லை என்று செயல் அலுவலர் பால்ராஜ் அறிவித்தார். நெல்லை மாவட்டம், திசையன்விளை பேரூராட்சி 18 வார்டுகளை கொண்டது. அதிமுகவை சேர்ந்த ஜான்சிராணி தலைவராக உள்ளார். அதிமுகவை சேர்ந்த 13வது வார்டு கவுன்சிலர் சண்முகவேல் என்ற ஐயாக்குட்டி மற்றும் 15வது வார்டை சேர்ந்த பிரேம்குமார் இருவரும் சமீபத்தில் திமுகவில் இணைந்தனர்.

இதனால் பேரூராட்சியில் திமுகவின் பலம் 11 ஆக உயர்ந்தது, அதிமுக பலம் 6 ஆக குறைந்தது. பாஜ கவுன்சிலர் திமுகவிற்கு ஆதரவாக இருந்தார். எனவே பேரூராட்சி தலைவி மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டும் என திமுக மற்றும் காங்கிரஸ் கவுன்சிலர்கள் பேரூராட்சி செயல் அலுவலர், பேரூராட்சி உதவி இயக்குநர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர். இதன்பேரில் நேற்று நம்பிக்கையில்லா தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டு தேவைப்பட்டால் வாக்கெடுப்பு நடத்தப்படும் என பேரூராட்சி செயல் அலுவலர், அனைத்து கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்பியிருந்தார்.

இந்நிலையில் கவுன்சிலர்கள் சண்முகவேல், பிரேம்குமார் இருவரும் அதிமுக மாவட்ட செயலாளர் இசக்கி சுப்பையா எம்எல்ஏ மற்றும் அமைப்பு செயலாளர் ஏ.கே.சீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன், முன்னாள் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் நாராயணபெருமாள், க.உவரி ஊராட்சி மன்ற துணை தலைவர் ஆறுமுகராஜன் கிருபாநிதி ஆகியோர் முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தனர். இதனால் பேரூராட்சியில் தற்போது அதிமுகவின் பலம் 8 ஆகவும், திமுக மற்றும் காங்கிரஸ் பலம் 10 ஆகவும் ஆனது.

இதையடுத்து ஏற்கனவே அறிவித்தபடி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கான திசையன்விளை பேரூராட்சி கூட்டத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. நம்பிக்கை வாக்கெடுப்புக்கு குறைந்தபட்சம் 14 கவுன்சிலர்கள் வர வேண்டிய நிலையில் நேற்று காலை 10 மணி வரை யாரும் வரவில்லை. 10 மணிக்கு 4வது வார்டு பா.ஜ. கவுன்சிலர் லிபியா வந்தார். அவர் ஏற்கனவே திமுகவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த நிலையில் நேற்று தனது நிலைப்பாட்டை மாற்றி அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.

இதையடுத்து திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளின் பலம் சமமானது. அதாவது திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் பலம் 9 என சரிசமமாக மாறியது. இதற்கிடையே காலை 10.30 மணிக்கு பேரூராட்சிக்கு வந்த 2வது வார்டு காங்கிரஸ் கவுன்சிலர் ஜோஸ்மின் சரஸ்வதி வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டார். 11.30 மணிக்கு வந்த 16வது வார்டு திமுக கவுன்சிலர் நடேஷ் அரவிந்த், செயல் அலுவலர் பால்ராஜிடம் மனு கொடுத்தார்.

அந்த மனுவில், ‘‘நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து செப்.24ம் தேதியிட்ட கடிதம் பெற்று, அதில் அக்.9ம் தேதி நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த விவாதமும், தேர்தலும் நடைபெறும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி சட்டம் 1996 பிரிவு 51ன்படி தலைவர், துணைத்தலைவர் குறித்து நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரும் போது மொத்த கவுன்சிலர்களில் 5ல் 3 பங்கு கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட ஒரு மனுவும், கூடவே 2 கவுன்சிலர்கள் கையெழுத்திட்ட தீர்மான நகலும் இணைக்கப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டிருக்க வேண்டும்.

ஆனால் இதுகுறித்த முறையான மனு தாக்கல் செய்யப்படாததால் நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்த இந்தக் கூட்டம் நடத்தக் கூடாது, மேலும் இந்தக் கூட்டம், தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சிகள் சட்டப்படி பேரூராட்சி உதவி இயக்குநர் தான் தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் பேரூராட்சி செயல் அலுவலர் அறிவிப்பு கொடுத்துள்ளார். எனவே பேரூராட்சி உதவி இயக்குநர் மட்டுமே வர வேண்டும்.

கூட்டத்தையும் பேரூராட்சி உதவி இயக்குனரே நடத்த வேண்டும். கூட்டத்தில் செயல் அலுவலர் பங்கேற்கக்கூடாது. எனவே இந்த கூட்டத்தை ஒத்தி வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.’’ என்றார். இதில் 9 கவுன்சிலர்கள் கையெழுத்திட்டிருந்தனர். இதையடுத்து போதிய கோரம் இல்லாததால் கூட்டம் நடைபெறவில்லை என்று செயல் அலுவலர் பால்ராஜ் அறிவித்தார். நம்பிக்கையில்லா தீர்மானம் கூட்டம் காரணமாக திசையன்விளை பேரூராட்சி நேற்று பரபரப்புடன் காணப்பட்டது.

கலெக்டர் அலுவலகத்தில் முறையீடு

திசையன்விளை பேரூராட்சி தலைவிக்கு எதிரான நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி என்று அறிவிக்க வேண்டும் என அதிமுக சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது. திசையன்விளை பேரூராட்சி தலைவி ஜான்சி ராணி 8 கவுன்சிலர்களோடு வந்து நேற்று கலெக்டர் அலுவலகத்தில் டிஆர்ஓ சுகன்யாவை சந்தித்து அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘திசையன்விளை பேரூராட்சி தலைவியாக உள்ள எனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

நானும், இங்கு வந்துள்ள கவுன்சிலர்களும் அச்சத்தின் காரணமாக, இன்று (நேற்று) நடைபெற இருந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கலந்து கொள்ளவில்லை. நம்பிக்கையில்லாத தீர்மானத்தின் மீது விருப்பம் இல்லாத கவுன்சிலர்களுக்கு தக்க பாதுகாப்பை வழங்க மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டிருந்தது.

The post கோரம் இல்லாததால் திசையன்விளை பேரூராட்சி அதிமுக தலைவி மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு கூட்டம் ரத்து appeared first on Dinakaran.

Read Entire Article