பவானி: ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை அருகே உள்ள நெரிஞ்சிப்பேட்டையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செல்லாண்டி அம்மன் கோயில் உள்ளது. இந்த கோயிலின் உண்டியல் நேற்று முன்தினம் திறந்து எண்ணப்பட்டது. அப்போது அதில் ரூ.10 ஆயிரம் பணக்கட்டுடன் ஒரு கடிதம் இருந்தது. அதை அலுவலர்கள் எடுத்து படித்தனர்.அதில், ‘கடந்த 55 ஆண்டுக்கு முன்பு அம்மன் சந்நிதிக்கு வரும்போது நெரிஞ்சிப்பேட்டை வீதியில் கண்டு எடுக்கப்பட்ட 2 ரூபாயை உரியவரிடம் கொடுக்க முடியாததாலும், உரியவரின் வாரிசு அதனை ஏற்க மறுத்துவிட்டதாலும், இன்று அந்த 2 ரூபாயுடன் தோராய மதிப்பு தொகை அம்மனிடம் சேர்க்கப்படுகிறது’ என எழுதப்பட்டிருந்தது. அந்த கடிதத்தில் அந்த பக்தரின் பெயர், முகவரி எதுவும், குறிப்பிடப்படவில்லை.
அந்த கடிதத்தை வைத்து பார்க்கும்போது, இந்த சம்பவம் 50 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது என தெரிகிறது. ஆனால் நடந்த சம்பவம் என்ன? என்பது குறித்த விவரம் தெரியவில்லை. அவர் கோயிலுக்கு வந்தபோது 2 ரூபாயை கண்டெடுத்திருக்கலாம் என்றும், அதை உரியவரிடம் கொடுக்காமல் இருந்ததால் அவரது மனதை பாதித்திருக்கலாம் என்றும், வாரிசுகளிடமாவது கொடுத்துவிடலாம் என நினைத்து அவர் ஏமாற்றமடைந்ததால் உண்டியலில் ரூ.10 ஆயிரத்தை கடிதத்துடன் போட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் வெளியாகி பக்தர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.
The post கோயிலில் கண்டெடுத்த 2 ரூபாய்க்கு பதிலாக உண்டியலில் ரூ.10 ஆயிரம் செலுத்திய பக்தர்: உருக்கமான கடிதம் appeared first on Dinakaran.