கோயம்பேடு மார்க்கெட்டில் சந்தேக நபர்கள் விரட்டியடிப்பு: போலீஸ் நடவடிக்கைக்கு பாராட்டு

3 hours ago 1

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இரவு நேரங்களில் மர்ம கும்பல் அட்டகாசம் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது என்று வியாபாரிகள் குற்றச்சாட்டு வைத்தனர். இதுசம்பந்தமாக நேற்று முன்தினம் கோயம்பேடு பூ மார்க்கெட் வியாபாரிகள், அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதியை நேரில் சந்தித்து புகார் அளித்தனர். அந்த புகாரில், ‘’பூ மார்க்கெட்டில் இரவு நேரங்களில் மர்ம கும்பல் அட்டகாசம் செய்துவருவதால் வியாபாரிகள், கூலி தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். குறிப்பாக பெண் வியாபாரிகள் மனதளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர். எனவே அங்காடி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து அங்காடி நிர்வாகம் சார்பில் கோயம்பேடு காவல் நிலையத்தில் கொடுத்துள்ள புகாரில், ‘’கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இரவு நேரங்களில் ரோந்துபணி தீவிரப்படுத்தவேண்டும்’’ என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து கோயம்பேடு பூ மார்க்கெட்டில் இன்ஸ்பெக்டர் ராகேஷ் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது சந்தேக நபர்களை விரட்டியடித்தனர். 24 மணி நேரமும் சுழற்சி முறையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள், மார்க்கெட் வளாகத்தில் உள்ள சென்னை புறநகர் காவல் நிலையத்தில் போலீசார் பணியில் ஈடுபடுவார்கள், வியாபாரிகளுக்கு பாதிப்பு வந்தால் உடனடியாக சென்னை புறநகர் காவல்நிலைய போலீசாரிடம் தெரிவிக்கலாம். போலீசார் பணியில் இல்லை என்றால் என்னிடம் நேரடியாக புகார் தெரிவிக்கலாம்.

கோயம்பேடு மார்க்கெட்டில் குற்றச் சம்பவங்கள், வியாபாரிகளுக்கு பாதிப்பு விளைவிக்கும் சம்பவம் நடந்தால் இன்ஸ்பெக்டரை சந்தித்து புகார் அளிக்கலாம். உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று இன்ஸ்பெக்டர் தெரிவித்தார். கோயம்பேடு பூ மார்க்கெட் துணைத்தலைவர் முத்துராஜ் கூறுகையில், ‘’மார்க்கெட்டில் இரவு நேரங்களில் மர்ம கும்பல் உள்ளே புகுந்து கூலி தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துகிறது. இதன் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தோம். இன்ஸ்பெக்டர் ராஜேஷ் நேற்றிரவு மார்க்கெட்டில் ஆய்வு செய்து வெளியாட்களை அப்புறப்படுத்தியுள்ளார். இது எங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார்.

The post கோயம்பேடு மார்க்கெட்டில் சந்தேக நபர்கள் விரட்டியடிப்பு: போலீஸ் நடவடிக்கைக்கு பாராட்டு appeared first on Dinakaran.

Read Entire Article