சென்னை: சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4-வது பாதை அமைக்கும் பணி நிறைவடைந்துள்ள நிலையில், இப்பாதையில் தெற்கு ரயில்வேயின் முதன்மை தலைமை மின் பொறியாளர் சோமஸ் குமார் மற்றும் அதிகாரிகள் வியாழக்கிழமை ஆய்வு மற்றும் அதிவேக சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர். இச்சோதனை வெற்றிகரமாக முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை எழும்பூர் - கடற்கரை இடையே 4 கி.மீ. தொலைவுக்கு 4-வது பாதை அமைக்கும் பணி கடந்த 2023-ம் ஆண்டு ஆகஸ்ட் இறுதியில் தொடங்கியது. குறிப்பிட்ட பகுதியில் நிலம் கையகப்படுத்துவதில் இருந்த சிக்கலால் பணி தொடர்வதில் தாமதம் ஏற்பட்டது. இதன்பிறகு, தேவையான நிலத்தை பெற்று, பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வந்தன. அண்மையில், இப்பாதையில் 100 சதவீதம் பணிகள் நிறைவடைந்தன.