கோபாலசமுத்திரம் அரசு பள்ளியில் விடுமுறை காலத்தில் வெட்டப்படும் மரங்கள்

3 hours ago 3

*பொதுமக்கள் கலெக்டரிடம் மனு

நெல்லை : கோபாலசமுத்திரம் அரசு பள்ளியில் உள்ள மரங்கள் விடுமுறை காலத்தை பயன்படுத்தி வெட்டி வெளியே கொண்டு செல்லப்படுவதாக அப்பகுதி மக்கள் நெல்லை கலெக்டர் அலுவலகத்திற்கு திரண்டு வந்து முறையிட்டனர்.

கோபாலசமுத்திரம் பகுதியை சேர்ந்த சபரிவாசன் தலைமையில் அப்பகுதி மக்கள் நேற்று கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, ‘‘கோபால சமுத்திரம் சுற்றுவட்டாரத்தில் 12 ஆயிரத்திற்கும் அதிகமான மரங்களை நட்டு நாங்கள் இயற்கை பராமரிப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.

கோபாலசமுத்திரத்தில் உள்ள பண்ணை வெங்கட்ராம ஐயர் உயர்நிலைப்பள்ளியில் புதர்மண்டி கிடந்த மைதானங்களை சீர்படுத்தி கொடுத்ததோடு, அப்பகுதியில் பள்ளியின் பசுமைப்படை உதவியோடு 3 ஆயிரத்து 500 மரக்கன்றுகளை நட்டு பராமரித்தோம். மரங்கள் பள்ளியில் இயற்கையின் கொடைகளாக காட்சி அளிக்கின்றன.

இந்நிலையில் கடந்த 4ம் தேதி முதல் 6ம் தேதிக்குள் அங்கு நின்றிருந்த இயல் மரங்களான நாவல், வேம்பு, நாட்டு வாகை, பூவரசு, புங்கை உள்ளிட்ட 11 மரங்கள் வேரோடு வெட்டி சாய்க்கப்பட்டு கனரக வாகனங்களில் கடத்தப்பட்டுள்ளன. இதை அறிந்த ஊர் மக்கள் அங்கு திரண்டு, அதை தடுத்தனர். பள்ளி தலைமை ஆசிரியரை சந்தித்து முறையிட்டுள்ளனர்.

தலைமை ஆசிரியர் தகுந்த விளக்கம் கொடுக்காமல், அந்த மரங்கள் பள்ளி குழந்தைகள் மீது சாய்ந்துவிடும் அபாயம் உள்ளது எனவும், மரங்களை வெட்டியவர் தரும் பணத்தை கொண்டு, பள்ளி தடுப்பு சுவரை உயர்த்தி கட்ட போவதாகவும் தெரிவித்துள்ளார். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினரோ மிரட்டல் தொனியில் பேசியுள்ளார்.

அன்னசத்திரமாக தொடங்கப்பட்ட இப்பள்ளி, பின்பு கல்வி கூடமாக உருவெடுத்து 117 ஆண்டுகளாக கல்வி தொண்டாற்றி வருகிறது. இப்பள்ளியில் இருந்து இதுநாள் வரை உள்ளூர் மக்கள் மீது காவல்துறையில் புகார் அளித்ததே இல்லை.

ஆனால் இப்போது மரங்களை வெட்டுவதை தடுப்பதாக புகார் தரப்பட்டுள்ளது. மேலும் பள்ளிக்கு பெற்றோர்களை வரவழைத்து, மரங்கள் அதிகமாக இருப்பதால், அவை கீழே விழ வாய்ப்புகள் உள்ளதாகவும், பூச்சி வண்டுகள் கடித்து மாணவர்கள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக கையெழுத்து பெற்று வருகின்றனர். எனவே பள்ளியில் நடக்கும் தவறுகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக கல்வித்துறை ஒரு குழுவை நியமிக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கோபாலசமுத்திரம் அரசு பள்ளியில் விடுமுறை காலத்தில் வெட்டப்படும் மரங்கள் appeared first on Dinakaran.

Read Entire Article