இடைப்பாடி, ஏப்.11: இடைப்பாடி அருகே கோனேரிப்பட்டி கதவணை பகுதியில் தேக்கி வைக்கப்பட்ட தண்ணீர் பராமரிப்பு பணிக்காக வெளியேற்றப்பட்டதால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீர், செக்கானூர் நீர்த்தேக்கம் வந்தடையும். அங்கிருந்து பூலாம்பட்டி, நெரிஞ்சிப்பேட்டை நீர்மின்கதவணை, கோனேரிப்பட்டி, ஊராட்சிகோட்டை நீர்மின் கதவணை உள்ளிட்ட பகுதியை கடந்து செல்கிறது. இந்நிலையில், பராமரிப்பு பணிக்காக 9ம் தேதி முதல் கோனேரிப்பட்டி கதவணையில் தேக்கி வைக்கப்பட்டுள்ள தண்ணீர் முழுவதுமாக வெளியேற்றப்பட்டதால், மின்சார உற்பத்தி நிறுத்தப்பட்டது.
நீர்த்தேக்க பகுதியில் இருந்து, அரசிராமணி பேரூராட்சிக்கு கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக, பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகிக்கபட்டு வந்தது. தற்போது தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். மீண்டும் 26ம்தேதி கோனேரிப்பட்டி நீர்மின் கதவணையில் தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இன்னும் 15 நாட்களுக்கு இந்த பராமரிப்பு பணி நடைபெறும் என்பதால் அரசிராமணி பேரூராட்சி மக்கள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என செயல் அலுவலர் தம்பிதுரை கேட்டுக்கொண்டுள்ளார்.
The post கோனேரிப்பட்டி கதவணையில் தண்ணீர் வெளியேற்றம் appeared first on Dinakaran.