
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெரியார் நகர் கிராமத்தில் 50-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதி வனப்பகுதியை ஒட்டி உள்ளதால், இங்குள்ள தேயிலை தோட்டங்கள் மற்றும் சாலையில் கரடி, காட்டெருமை, கருஞ்சிறுத்தை, சிறுத்தைகள் உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் தொடர்ந்து இருந்து வருகிறது.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் சிறுத்தை ஒன்று அந்த கிராம சாலை வழியாக நடந்து சென்று அருகில் உள்ள தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து மறைந்தது. இந்த காட்சி அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவானது. சிறுத்தை நடமாட்டத்தால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்து உள்ளனர். மேலும் தொடர்ந்து இப்பகுதியில் கருஞ்சிறுத்தை, கரடி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகளின் நடமாட்டம் இருந்து வருவதால், அதை கண்காணித்து அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதேபோல் குன்னூர் அருகே அட்டடி குடியிருப்பு பகுதிக்குள் நேற்று இரவு சிறுத்தை உலா வந்தது. இதை கண்ட பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சமடைந்தனர். தொடர்ந்து சிறுத்தை குடியிருப்பு பகுதியில் நடமாடியது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர். எனவே, சிறுத்தையை கூண்டு வைத்து வனத்துறையினர் பிடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.