திருவாடிப்பூரத்து செகத்துதித்தவளான ஆண்டாள், பெரியாழ்வாரால் பேணி வளர்க்கப்பட்டு, பெருமானையே மணம் கொள்ள விழைந்தாள். அதுபோல `வேங்கடவற்கென்னை விதிக்கிற்றியே’ என்னும் மாவிருஞ்சோலை மணாளன் என்று ஒவ்வொரு திவ்ய தேசத்து எம்பிரான் மீதும் அவள் பக்தி கொண்டாலும், அரங்கனையே மணம்புரிய விரும்பினாள். அவள் விருப்பப்படியே அரங்கனை அடைந்தாள். ஸ்ரீ வில்லிபுத்தூரிலே ஆண்டாள் கோயிலில், ஆண்டாள், ரங்கமன்னார், கருடனுடன் வெண்ணெயுண்ட வாயனான கண்ணபிரானின் கதைகளை கேட்டறிந்து அவன் மீது காதல் கொண்டு தானே அவன் லீலைகளை மிகவும் ரசித்தாள். அவனை வெண்ணெய்த்தாழி கண்ணனாகவும் கற்பனை செய்து கொண்டாள்.
ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவாடிப்பூரத்தில் நடக்கும் 10 நாள் திருவிழாவில் ஒருநாள், வெண்ணெய்த்தாழிக் கண்ணனாக வேடம் பூண்டு காட்சியளிக்கிறாள். ஆண்டாள் தன் திருப்பாவையிலே சிற்றம் சிறுகாலே எழுந்திருந்து தன் தோழியர்களையும் எழுப்பி மார்கழி நோன்பு நோற்று தூயவளாவே சென்று வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க நமக்கு வழிகாட்டினாள். அதே ஸ்ரீ வில்லிபுத்தூரில் திருவிழா நாளில் அவள் அரங்கனை தன் மடியில் கிடத்திய அழகு கோலத்தில் காட்சியளிக்கிறாள். அந்த அற்புத தரிசனத்தை காண்போர் அன்னை அரங்கனைத் துயல் கொள்ளச் சொல்கிறாளா அல்லது துயில் கொண்டிருக்கும் பக்தர்களை எழுப்பச் சொல்லி, அதற்காக அரங்கனை எழுப்புகிறாளா என்று நயந்து ரசிக்கிறார்கள். `கற்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ உன் திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித் திருக்குமோ’ என்று திருமாலிருஞ்சோலை கள்ளழகரைப் பாடிய ஆண்டாளே கள்ளழகராகவும் காட்சி தருகிறாள்.
அவளது தோற்றத்தை பாராட்டும் வகையில், கள்ளழகரே அவளை தன் மடி மீது இருத்தி திவ்ய தரிசனம் தருகிறார். ஆடிப்பூர உற்சவத்தில் கண்கொள்ளாக் காட்சி இது. ஆண்டாள் நாச்சியார் திருமாலிருஞ்சோலை நம்பியிடம், தனக்கு அரங்கனுடன் திருமணம் நடந்தால் அவருக்கு 100 தடா (குடம் போன்ற அளவு) வெண்ணெயும், 100 தடா அக்கார வடிசலும் சமர்ப்பிப்பதாக தன் நாச்சியார் திருமொழியில் பிரார்த்தனை செய்து கொள்கிறாள். அவள் சொன்னபடியே பகவத் ராமானுஜர், திருமாலிருஞ்சோலை கள்ளழகருக்கு அந்த சீர் வரிசைகளை சமர்ப்பித்துவிட்டு, அதன்பிறகு ஆண்டாளை தரிசிக்க வில்லிபுத்தூர் சென்றார். அவர், ஆண்டாள் கோயிலினுள் நுழையும்போதே மூலஸ்தானத்திலிருந்து “வாரும் என் அண்ணாவே’’ என்று ஆண்டாள் நாச்சியார் அசரீரியாக அழைத்தாள்.
நெக்குருகிப்போன ராமானுஜர், தன்னை அண்ணனாக வரித்த ஆண்டாளை கண்ணாறக் கண்டு கண்ணீர் பெருக்கினார். ஆண்டாளுக்கு அண்ணனானதால்தான், காலத்தால் ஆண்டாளைவிட அவர் பல வருடங்கள் பிற்பட்டபோதிலும், வைணவம் அவருக்கு பெருமதிப்பளித்திருக்கிறது. ஆமாம், அவரை `திருப்பாவை ஜீயர்’ என போற்றியது. அதுமட்டுமல்ல, `பெரும்புதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழி யவே’ என்று ஆண்டாளையும் புகழ்கிறது. ஸ்ரீ வில்லிபுத்தூர் விழாவில் மாலே மணி வண்ணா’ பாசுரம் பாடும் தினத்தன்று தங்கையான ஸ்ரீ பெரும்புதூர் ஆண்டாளுக்கு ராமானுஜர் விருந்தும் அளிக்கிறார்.
சென்னை திருவல்லிக் கேணி பார்த்தசாரதி கோயிலில், ஆண்டாளுக்கு தனி மகத்துவம் உண்டு. இங்கு பிரதான சந்நதியில் மூலவர் வேங்கட கிருஷ்ணனும் உற்சவர் பார்த்தசாரதியும் எழுந்தருளியுள்ளனர். மூலவருக்கு அருகிலேயே ருக்மிணி பிராட்டியும் எழுந்தருளியுள்ளாள். எனினும் உற்சவர் பார்த்தசாரதிக்கும், தாயாருக்கும் தனி சந்நதி கிடையாது.
அந்த பெருமைமிக்க ஸ்தானம் ஆண்டாளுக்கே அளிக்கப்படுகிறது. ஆடிப்பூரத்தன்று ஆண்டாளுக்கும், பார்த்தசாரதிக்கும் கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. போகி திருக்கல்யாணமும் இவர்களுக்கே நடத்தப்படுகிறது. `கொண்டல் வண்ணனை, கோவலனாய் வெண்ணையுண்ட வாயன் என் உள்ளம் கவர்ந்தானை, அண்டர்கோன் அணியரங்கன் என் அமுதினைக் கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணாவே’ என்று அமலனாதிப்பிரான் என்ற பாடல் தொகுப்பிலே அனைவரையும் கவர்ந்த அரங்கனை ஆண்டாளும் கவர்ந்து விடுகிறாள். ஆண்டாளை அடைய கருட வாகனத்திலே ஸ்ரீ வில்லிபுத்தூர் வந்து இறங்கும் அவசரத்தில் காலை நொண்டி வந்து ஆண்டாளின் கைப்பிடித்தமையால் ரங்கமன்னார் (வில்லிபுத்தூரில் அவரை நொண்டி மன்னார் என்றும் வேடிக்கையாக குறிப்பிடுவர்) என்ற பெயருடன்அவர் விளங்குகிறார். ஆண்டாளுடன் கருடனையும் ஸ்ரீ வில்லிபுத்தூரில் ஆண்டாள் கோயிலில் (நாச்சியார் திருமாளிகை என்றும் கூறுவர்) தரிசிக்கலாம்.
The post கோதை ஆண்டாளின் கவின்மிகு கோலங்கள் appeared first on Dinakaran.